செய்வோம் நன்மை!

அன்புடன் செய்வோம் நன்மை!
நற்செய்தி மாலை: மாற்கு 9:1-3.
” மேலும் அவர் அவர்களிடம், ‘ இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார். ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.”

நற்செய்தி மலர்:
தோற்றம் மாறிய இயேசுவின் உடையோ,
தூய்மையில் உயர்ந்த வெண்மை.
மாற்றம் இல்லா மனிதரின் நெஞ்சோ,
மடமையில் உறைந்த தன்மை.
ஏற்றம் கொண்ட இறைப்பணியாலே,
எங்கும் உரைப்போம் உண்மை.
ஆற்றல் இல்லா மனிதரும் மீள்வார்;
அன்புடன் செய்வோம் நன்மை!
ஆமென்.

வீண் வீண்!

வீண் வீண், வாழ்வே வீண்!
நற்செய்தி மாலை: மாற்கு 8:36-38.
“ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்’ என்றார்.”

நற்செய்தி மலர்:
கொட்டும் மழையெனப் பொன்பொருளும்,
கோட்டை கொத்தள வீடுகளும்,
வெட்டும் சுரங்கத் தோட்டங்களும்,
வேண்டும் அளவில் சேர்த்தாலும்,
தட்டும் மைந்தன் தந்தருளும்,
தந்தையாம் கடவுளின் விடுதலையை
மட்டும் ஒருவர் பெற மறுத்தால்,
மனிதப் பிறப்பே வீணாகும்!
ஆமென்.

எமது வேலை!

எம் வேலை, உம் வேலை!

எண்ணிக்கையைப் பெருக்கும் நோக்கில்
இயேசுவின் வாக்கு உரைக்கவில்லை.
மண்ணில் மாபெரும் அரசு அமைத்து,
மாற்றார் வீழ்த்தவும், குரைக்கவில்லை.

கண்ணில் காணா கடவுளின் அன்பைக்
கருத்தாய்ச் சொல்வதே, எம் வேலை.
பண்ணும் தீச்செயல் தவறென உணர்ந்து,
பற்றால் மீளவதோ, உம் வேலை!
ஆமென்.

– கெர்சோம் செல்லையா.

நீ வா…

நீ வா என்று அழைக்கின்றார்!
நற்செய்தி மாலை: மாற்கு 8:34-35.
“பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ‘ என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.”

நற்செய்தி மலர்:
ஈவாய்ப் பெற்ற இம்மையின் வாழ்வை,
இறைவனின் பணிக்கென அமைப்பவர் யார்?
நோவாய்ப்பட்ட மானிடம் தழைக்க,
நுகமாம் சிலுவை சுமப்பவர் யார்?
ஏவாள் ஆதாம் வழியில் செல்வார்,
இன்று மீள்வார், உழைப்பவர் யார்?
நீ வா என்று அழைப்பவர் குரலை
நெஞ்சில் ஏற்றால், பிழைப்பவர் பார்!
ஆமென்.

ஆண்டவருக்கே அறிவுரையா?

ஆண்டவருக்கே அறிவுரையா?
நற்செய்தி மாலை: மாற்கு 8:31-33.
” மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் ‘ என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், ‘ என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ‘என்று கடிந்துகொண்டார்.”

நற்செய்தி மலர்;
ஆண்டவருக்கே அறிவுரை கூறும்
அளவில் கிறித்தவர் நடக்கின்றார்!
அதனால்தானே ஊழியர் இன்று,
ஆணவம் கொண்டு கிடக்கின்றார்!
வேண்டுவோரின் வெறுமை காணும்,
வேந்தன் பற்றையும் பார்க்கின்றார்.
வெற்றியுள்ள வாழ்வும் ஈந்து,
விண்ணின் அரசில் சேர்க்கின்றார்!
ஆமென்.

எந்தன் தந்தை….

எந்தன் தந்தை செல்லையா!

“பிள்ளகைளின் பெருமை
அவர்கள் தந்தையரே.”
(நீதிமொழிகள் 17:6).

“புனிதன் இயேசு வழியில் வந்தாய்.
புரிந்த பணிக்குப் பெருமை தந்தாய்.
இனியவள் கிளாறியால் அறுவர் ஈந்தாய்;
இவர்கள் உயர உழைத்துத் தேய்ந்தாய்.

மனிதர் நடுவில் நிமிர்ந்தே நின்றாய்;
மதி என்றாலே நேர்மை என்றாய்.
தனியன் என்றார் முன்பு வென்றாய்;
தந்தைக்கிலக்கணம் தந்தே சென்றாய்!”

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 2 people

கெட்டார் கெட்டார்!

கெட்டார் கெட்டார்!

மெய்யென்றால் சதை காட்டும் திரைப்படத்தார்,
மேலோங்கி ஒழுக்கத்தைக் கைவிட்டார்.
பொய்யாலே புனைந்துரைக்கும் ஊடகத்தார்,
பொருளீட்ட அவ்வழுக்கை வெளியிட்டார்.

அய்யரெல்லாம் அருள் மறந்து போய்விட்டார்;
அறமறியாத் தலைவர்கள்தான் உயர்ந்திட்டார்.
உய்யும்வழி உரைப்பவரும் உறங்கிட்டார்.
உண்மையைத் தெரியாரோ கெட்டார், கெட்டார்!

-கெர்சோம் செல்லையா.

யார் எனத்தெரியாது…

இயேசுவை அறிவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 8:27-30.
“இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ‘ நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ‘ என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், ‘ சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் ‘ என்றார்கள். ‘ ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ‘ என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ‘ நீர் மெசியா ‘ என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.”
நற்செய்தி மலர்:
யார் எனத் தெரியாமல் இயேசுவை வெறுத்தேன்;
எல்லாம் தெரிந்ததாய் அறிவினை மறுத்தேன்.
வேர் முதல் காய் வரை வேறு பிரித்தேன்;
வேண்டாம் கனியென தோலும் உரித்தேன்.
போர் வெறி கொண்டு நான் புனிதனைத் தடுத்தேன்;
புரிந்திடும் ஆவியைப் பெற்றபின் அடுத்தேன்.
நேர்வழி செல்வதே எளிதெனப் புரிந்தேன்;
நிம்மதி அங்கே, இயேசுவைத் தெரிந்தேன்!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.

நடக்கிற மரமாய்

நடக்கிற மரமாய்க் கிடக்கிற மனிதா!

நற்செய்தி மாலை: மாற்கு 8:22-26.

“அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர். அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, ‘ ஏதாவது தெரிகிறதா? ‘ என்று கேட்டார். அவர் நிமிர்ந்து பார்த்து, ‘ மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள் ‘ என்று சொன்னார். இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார். இயேசு அவரிடம், ‘ ஊரில் நுழைய வேண்டாம் ‘ என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.”

 

நற்செய்தி மலர்:

நடக்கிற மரமாய்க் கிடக்கிற மனிதா!

நன்மை உன்னில் கிடைக்குமோ எளிதா?

கடக்கிற ஆறும் கரையினுக்குதவும்;

கடலினில் விழுமுன் கனிமரம் வளர்க்கும்.

உடைக்கிற நீயோ, யாருக்கு வேண்டும்?

உண்மை இதுதான், உனக்கே புரியும்.

படைக்கிற இறையின் வாக்கினைக் கேட்பாய்;

பணிவுடன் ஏற்று, பயன்தனில் மகிழ்வாய்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அற்புதம் கண்டும்…..


​நற்செய்தி மாலை: மாற்கு 8:19-21.

“ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்த போது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்? ‘ என்று அவர் கேட்க, அவர்கள் ‘ பன்னிரண்டு ‘ என்றார்கள்.  ‘ ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்? ‘ என்று கேட்க, அவர்கள், ‘ ஏழு ‘ என்றார்கள்.  மேலும் அவர் அவர்களை நோக்கி, ‘ இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா? ‘ என்று கேட்டார்.”
நற்செய்தி மலர்:
அற்புதம் காண்கின்றோம்;
ஆயிரம் பெருக்கின்றோம்.
பொற்பரன் இயேசுவையோ, 
புரியா திருக்கின்றோம்
கற்பனை அல்ல இது;
கடவுளைப் பற்றிடுவோம்.
நற்செயல் செய்வதற்கே,
நற்செய்தி கற்றிடுவோம்!
ஆமென்.