நாள்தோறும் நற்செய்தி 

<February 2012>
SuMoTuWeThFrSa
2930311234
567891011
12131415161718
19202122232425
26272829123
45678910
 



  
 
மெய் நன்று: 18
இதோ, இந்த மனிதன்
 

இயேசு முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை இதோ இந்த மனுஷன் என்றான். யோவான் 19:5.

மெய்யான இறைவன் (யோவான் 5:20) மேலான இறைவன் (ரோமர் 2:13) என்று திருமறையில் வாழ்த்தப்படும் இயேசு அதேத்திருமறையில் மெய்யான மனிதனாகவும் வருகின்றார். சிலர் பலரைத் தெய்வத்தன்மையுள்ள மனிதர் (God like men) என்பார். பலர் சிலரை தெய்வ மனிதர் (God Men) என்பார். இவர்களிலிருந்து எல்லா விதத்திலும் மாறுபட்ட இயேசுவோ மெய்யான இறைவன் மெய்யான மனிதன் புதிராகவும், புரியாததுமாயிருப்பினும் நாம் அறிய வேண்டிய அளவிற்குத் தக்கதாய் நமக்குக் கற்றுத்தர, நல்லாவியானவரை வேண்டி எழுதத் தொடங்குகிறேன்.

ஆண்டவருடைய மனித வாழ்க்கையின் கடைசி நாளிலே, அவரை அறைந்து கொல்ல ஆணையிட்ட ஆளுநர் பிலாத்துவின் கண்களுக்கு அவர் மனிதனாகவே தோன்றினார். எனவே தான் பிலாத்து குற்றஞ்சாட்டிய யூதர் முன்பு இயேசுவைக் கூட்டிக்கொண்டு வந்து இதோ இந்த மனுஷன் (Behold theMan) என்றான். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொன்னபழயினால் அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் சாகவேண்டும். (யோவான் 19:7) என்று வாதிட்ட யூதர் கண்களிலும் இயேசு எல்லோரைப் போன்ற ஒரு மனிதனே.

அவரால் நலம்பெற்ற பெதஸ்தாகுளத்துப் பிணியாளியின் கண்களிலும் அவர் ஒரு மனிதனே என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார். (The Man who healed me said to me, take up your pallet and walk) என்றுரைக்கும் அவன் வாக்கு இதை வெளிப்படுத்துகிறது.

உயிர் தரும் உணவு நானேயெனும் உன்னதனின் வாக்கைக் கேட்ட யூதர் அவரை மனிதனாய்க் கண்டபடியால் இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்கு புசிக்கக் கொடுப்பான்?;. (How can this man give us his flesh to eat? யோவான் 6:52) என்று வாதம் செய்தனர்.

அவர் காலத்து மனிதரில் அநேகர் அவரை விசுவாசித்தார்கள் ஆனால் அவர்கள் வாக்கின் படியும் அவர் மனிதனே கிறிஸ்து வரும் போது இவர் செய்கிற அற்புதங்களைப் பார்க்கிலும் அதிகம் செய்வாரோ (When the Christ appears will he do more signs than this man has done? யோவான் 7:31)

அவரை பிடிக்கச் சென்ற காவலரும் அவர் பேச்சைக் கேட்டுச் சொன்னதும் அவர் மனிதன் என்று தானே அந்த மனுஷன் பேசுகிறது போல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை (No man over spoke kike this man யோவான் 7:46) ஆவிக்குரிய கண்ணற்றவர்களாததால் அவர்களின் பார்வைக்கு ஆண்டவர் மனிதராய் தோன்றினாரென்று ஐயுறும் மனித நண்பரே பிறக்கு முன்பே தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே தூய ஆவியினால் நிரப்பப்பட்ட யோவானின் பார்வையிலும் இயேசு மனிதனே எனக்கு பின் ஒருவர் வருகிறார். (After me comes a man யோவான் 1:30) எனும் அறிக்கை இதைத் தெளிவு படுத்துகிறதல்லவா?

இவர்கள் வாய்ச்சொல் இப்படியிருக்க, இயேசு தன்னைப் பற்றி என்ன சொன்னார்? தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்கு சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்ல தேடுகிறீர்கள் (யோவான். 8:40) எனும் இயேசுவின் வாய்மொழியே அவரைமனிதனாய்க் காண்பிக்கிறதே.

இனிய இறைமக்களே இயேசு இறைவன் தான் எனில் இறைவனான இயேசு மனிதரானார். நாட்டு கதைகளில் நாம் காணும் கற்பனை வடிவிலோ உருவிலோ உடல்பெறாது, நானிலத்து மக்கள் எப்படியிருப்பாரோ அப்படியே மனித உருவெடுத்து பிறந்தார் வாழ்ந்தார் இறந்தார் எனவே தான் மனிதனாய் இருந்த இயேசுவிடம் மனிதரை வாட்டும் பசியிருந்தது (மத் 4:2 லூக் 4:2) அவர் மனிதரைப் போன்றே விடாய்த்தவராயிருந்தார். (யோவான் 4:8 19:28) ஓய்வை விரும்பும் மனிதன் உறங்குவது போல அவரும் அயர்ந்து தூங்கினார் (மாற்கு 4:38) ஒழிக்க முயன்றவரின் பகையால் ஒதுங்கி வாழ்ந்தார் (யோவான் 7:7-10) சாதாரண மனிதனைப் போன்றே சாத்தானால் சோதிக்கப்பட்டவர் (மத். 4:1 லூக் 4:2 எபி 2:18) சாவுக்கேதுவானவருத்தமும் கொண்டார் (மத் 26:38) தனிமையை உணர்ந்தவர் (யோவான் 6:66,67) தன் வாழ்க்கையில் திகில் கலக்கமும் கொண்டார் (மாற்கு 14:33) மனிதர் அழுவதைப் பார்த்துக் கண்ணீர் விட்டவர் (யோவான் 11:35) மானிடர் யாவருக்காகவும் அழுதார் (லூக்19:41 : எ.பி. 5:7) எல்லாவற்றிற்கும் மேலாய்த் தன்னியலாமையைக் கூட அவர் வெளிப்படுத்த தயங்கவில்லை (மத் 24:36) விண்ணையும் மண்ணையும் படைத்தவர் (கொலோ 1:16) விண்வீடு விட்டு மண்ணிற்கு வந்தபோது மற்றவர்களைப் போலவே அவரும் மனிதனாகவேயிருந்தார் என்றியம்புவதில் எள்ளளவும் தவறில்லை.

இங்கேயொரு வேறுபாட்டைத் தெளிவாய்த் தெரிந்திருக்க வேண்டியது எல்லா மனிதரின் கடமையாகிறது. இயேசுவும் மனிதர் இதை எழுதும் வாசிக்கும் நாமும் மனிதர் இருப்பினும் இயேசுவாகிய மனிதருக்கும் பெரியதோர் இடைவெளியுண்டு. அவர் பாவம் அறியாதவர் (கொரி 5:21) : அவர் பாவம் செய்யவில்லை (பேதரு 2:22) அவரிடத்தில் பாவமில்லை )யோவான் 3:5) ஆனால் நாம் அனைவருமோ பாவிகள் நீதிமான் ஒருவனாகிலும் இல்லை (ரோமர் 3:10) இறைவனின் அளவுகோலின் கீழ் எல்லாரும் வழிதப்பி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள் நன்மை செய்கிறவன் இல்லை : ஒருவனாகிலும் (ரோமர் 3:12) ஆதாம் தொடங்கி அனைவரும் பாவமனிதர் அவர் மட்டும் பாவமில்லா மனிதர் என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? ஏன்று அவர் கேட்ட கேள்வி இன்றும் சிந்திக்க முடியாச் சவாலாகவே நிற்கிறது எனவேதான் எபிரேயக் கடிதத்தை எழுதியவர் இயேசுவை பரிசுத்தர், குற்றமற்றவர், மாசில்லாதவர், பாவிகளுக்கு விலகினவர் (எபி. 7:26) என்று பாராட்டுகிறார்.

புவியில் பிறந்த மனிதர் எவரோடும் புனிதர் இயேசுவை ஒப்பிடவோ ஒன்றியைத்துப் பேசவோ இயலாது. எனினும் இன்னொரு மனிதனின் முன்னிலையொடு பாவத்தில் விழுவதற்கு முன்பிருந்த நிலையோடு இணைத்துப் பார்க்கிறது இறைவனின் திருமறை அந்த மனிதர் வேறு  யாருமல்லர் அனைத்து மனுக்குலத்தின் ஆதித் தந்தை ஆதாமே கட்புலனாகக் கடவுளின் சாயல் என்று கத்தோலிக்கத் திருமறையில் காணும் இறைசாயல் கொண்ட இயேசுவைப் போல முதலாம் ஆதாமும் ஆண்டவரிக் சாயலிலே படைக்கப்பட்டான் (அதி 1:26,27:5:1) இருவரும் இறைசித்தம் அறிந்தவர்கள். ஆண்டு கொள்ள அதிகாரமும் அவர் சித்தம் நிறைவேற்ற ஆற்றலும் பெற்றிருந்தான் ஆதாம் அவ்வண்ணமே இரண்டாம் ஆதாமாகிய இயேசுவும் ஆனால் முதலாம் ஆதாம் விழுந்தான் (ஆதி. 3,6,7) இரண்டாம் ஆதாமோ இறைவாக்கைக் கொண்டே எதிரியாம் பிசாசை எதிர்த்து, விரட்டினார், வெற்றியும் சிறந்தார் (மத் 4:10) மனிதன் (ஆதாம்) வழியாய்ச் சாவு உண்டானது போல மனிதன் (இயேசு) வழியாகவே இறந்தோர்க்கு உயிர்த்தெழுதலும் உண்டு ஆதாமில் அனைவரும் இறந்தது போல கிறிஸ்துவில் எல்லாரும் உயிர் பெறுவர்” (1 கொரி. 15:21,22) என்றெழுதி பவுலடியார் இரண்டு மனிதர்களையும் இணைத்து – வேறுபடுத்திக்காட்டுகிறார்.

இப்படியாய் எவருடனும் இணைத்துப் பேசயியலா மனிதன் இயேசுவை இருபது நூற்றாண்டு காலமாய்த் திருச்சபை ‘மெய்யான மனிதன்’ என்று ஏற்றிப் போற்றுகிறது. இறை மக்களும் இப்படியாய் வாழ்த்துகின்றனர்:

“மனிதர் யாரும் மனிதரல்லர், பாவ மனிதரே!

புனிதர் இயேசுவே மனிதர், மெய் மனிதரே!!”

அன்பர் இயேசுவே மெய்யான இறைவன் அவர் ஒருவரே மெய்யான மனிதனுமாவார். மெய்யான மனிதராம் இயேசுவின் முன்பு நாமெல்லாரும் பொய்யான மனிதரே! பொய்மை விலகிட, மெய்மையடைந்திட மெய்மையான மனிதரின் மேலான வழிநடப்போமா? மெய் வாழ்வுதனைப்பெறுவோமா? அவரருள் அனைவரையும் ஆளட்டும். ஆமென்.

 
     
   

 

 


 Author : GERSHOM CHELLIAH
Copyright ©2009 thetruthintamil.com
+91-44-2565 5000