நானும் குடிப்பேன்!

நானும் குடிப்பேன்!
நற்செய்தி மாலை: மாற்கு
“சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார்.36 ″ அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் ″ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
கையில் தந்த கிண்ணம் பிடித்தேன்;
கனவாய் நினைத்துக் கசப்பைக் குடித்தேன்.
பையில் இன்னும் இருப்பது கண்டு,
பதறி நானும் நெஞ்சு துடித்தேன்.
ஐயா, எனக்குப் போதும் என்று,
அவற்றை வீசி கையும் கடித்தேன்.
மெய்யானவரோ, என்னைப் பிடித்தார்;
மெதுவாய் எடுத்தேன், துன்பம் குடித்தேன்!
ஆமென்.

No automatic alt text available.

அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்!

அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்!

எப்படிச் சேர்த்தார் எனப் பாராமல்,
எவ்வளவென்று மலைக்கின்றார்.
இப்படித் தவற்றைப் புகழத் தொடங்கி,
எளியரும் பண்பைக் கலைக்கின்றார்.
தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகி,
தரணியைச் சீர் குலைக்கின்றார்.
அப்படிப்பட்டோர் கையினில் மீள,
அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, text

இறப்பு என்னும் துயில்!

இறப்பு என்னும் துயில்!
நற்செய்தி மாலை:மாற்கு 14:32-34.
” பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், ‘ நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள் ‘ என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், ‘ எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
இறப்பைக் குறித்து எண்ணும்போது,
யாவரும் அடைவது திகிலாகும்.
எங்கு செல்வோம் என்றறியார்க்கு,
எட்டும் உயரம் முகிலாகும்.
பிறப்பின் பொருளை அறிவாருக்கு,
இறப்பு ஒருவகை துயிலாகும்.
பிறவி தந்த இறையுடன் இணையும்
பெரும்பேறுதான் ஒயிலாகும்!
ஆமென்.

No automatic alt text available.

சொல்லும் வரைக்கும் படுக்காதீர்!

சொல்லும் வரைக்கும் படுக்காதீர்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:29-31.
” பேதுரு அவரிடம், ‘ எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன் ‘ என்றார். இயேசு அவரிடம், ‘ இன்றிரவில் சேவல் இருமுறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன் ‘ என்றார். அவரோ, ‘ நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன் ‘ என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள்.”
நற்செய்தி மலர்:
உணர்ச்சிப் பெருக்கில் உரைப்பது எல்லாம்,
உண்மை என்றென எடுக்காதீர்.
மணக்கும் ஆவியர் திட்டம் என்றும்
மறைபொருள் விளக்கம் கொடுக்காதீர்.
இணக்கம் இல்லா முடிவும் வேண்டாம்;
இறையின் விருப்புள் தொடுக்காதீர்.
சுணக்கம் இல்லாச் சொல்லே போதும்;
சொல்லும் வரைக்கும் படுக்காதீர்!
ஆமென்.

No automatic alt text available.

ஏழைக்குதவி, பின் பாடு!

ஏழைக்குதவி, பின் பாடு!
நற்செய்தி மாலை: மாற்கு 14:27-28.
“இயேசு அவர்களிடம், ‘ நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், ‘ ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும் ‘ என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
இன்னோர் ஆட்டை வெட்டும்போது,
எதுவும் பேசா வெள்ளாடு,
தன்னாயரின் கொலையைக் கண்டு,
தகவலுக்கிடுமோ கூப்பாடு?
முன்னே நிற்பவர் எவரென்றாலும்,
முதற்கண் உதவுதல் கடப்பாடு.
என்னினமெனினும் இதுதான் செய்தி;
ஏழைக்குதவி, பின் பாடு!
ஆமென்.

Image may contain: outdoor and nature

நன்றிப் பாடல் பாடியவாறே…

நன்றிப் பாடல் பாடியவாறே…
நற்செய்தி மாலை: மாற்கு 14:26.
“அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.”
நற்செய்தி மலர்:
அன்றைய சூழல் நன்கு அறிந்தும்,
ஆண்டவர் பாடல் பாடுகிறார்.
நன்றிப் பாடல் பாடியவாறே,
நமக்காய்ச் சிலுவையை நாடுகிறார்.
இன்றைய நாளின் இன்னல் கண்டு,
எப்படி கிறித்தவர் ஓடுகிறார்?
என்று பார்த்தால், நானும் விழுந்தேன்;
இயேசு என்னால் வாடுகிறார்!
ஆமென்.

Image may contain: one or more people and text

ஊனைத் தந்தார், உதிரம் தந்தார்!

ஊனைத் தந்தார், உதிரம் தந்தார்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:22-25.
” அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ‘ இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல் ‘ என்றார்.23 பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர்.24 அப்பொழுது அவர் அவர்களிடம், ‘இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். 25இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.”
நற்செய்தி மலர்:
வானைத் தந்தார், வையம் தந்தார்;
வாழ்பவர்க்கெல்லாம் வழியும் தந்தார்.
ஊனைத் தந்தார், உதிரம் தந்தார்;
உலகோர் மீள உயிரும் தந்தார்.
தானைத் தலைவர் பலபேர் வந்தார்;
தம் நலம் காக்க, ஊர்வலம் வந்தார்.
சேனைத் தலைவர் கிறித்து வந்தார்;
சிலுவை அன்பின் உடன்படி தந்தார்!
ஆமென்.

Image may contain: sky, mountain, outdoor and nature

நிம்மதி என்னும் விருந்துண்போம்!

நிம்மதி என்னும் விருந்துண்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:20-21.
“அதற்கு அவர், ‘ அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன். மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
வஞ்சம் செய்து வளர்வோர் ஒருநாள்
வந்தது ஏனென வருந்திடுவார்.
கொஞ்சங்கூட குறை வைக்காமல்,
கொடுமைக் குவளை அருந்திடுவார்.
அஞ்சும் தீமை அழிப்பதையறிந்தால்,
ஆண்டவர் பிடிக்கத் திருந்திடுவார்.
நெஞ்சம் நிமிர்ந்து, நேராய் நடப்போர்,
நிம்மதி என்னும் விருந்தடைவார்!
ஆமென்.

Image may contain: bird

நானோ? நானோ?

நானோ? நானோ?
நற்செய்தி மாலை: மாற்கு 14:17-19.
“மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார். அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, ‘ என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார். அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக, ‘ நானோ? நானோ? ‘ என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.”
நற்செய்தி மலர்:
நானோ கயவன் என்று கேட்கும்
நல்லோர் நடுவில் ஒருவன் பார்.
ஏனோ அவனை இயேசு கண்டும்,
எதற்கு வைத்தார், அறிவோன் யார்?
வானோர்க்கடுத்த புதிராய் வாழ்வில்,
வஞ்சகர் நம்மைச் சூழ்கின்றார்.
தேனோ, நஞ்சோ, தெரியாவிடினும்,
தெய்வம் நம்மை ஆள்கின்றார்!
ஆமென்.

No automatic alt text available.

கிறித்து வந்தார்!

கிறித்து வந்தார்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:12-16.
“புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், ‘ நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ‘ என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: ‘ நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், ‘ நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே? ‘ என்று போதகர் கேட்கச் சொன்னார் ‘ எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள். ‘ சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.”
நற்செய்தி மலர்:
அறைகள் பற்பல கட்டி வைத்து,
அவற்றுள் செல்வம் கொட்டி வைத்து,
இறை வா இறை வா என்றழைத்தேன்;
இறை வர மறுத்தார், நிறைவில்லை!
மறைநூல் முன்பு எனைவைத்து,
மண்ணே வாழ்க்கை எனநினைத்து,
குறைகள் உணர்ந்து கூப்பிட்டேன்;
கிறித்து வந்தார், குறைவில்லை!
ஆமென்.

Image may contain: people sitting, plant, table, tree and outdoor