கலங்கும் கயவர்!

கலங்கும் கயவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:7-9.
7 அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்டயாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும்,
8 சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:

யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்.

கிறித்துவில் வாழ்வு:
கலக்கிடும் கயவர் கலங்குவார் ஒருநாள்.
காணும் காட்சிகள் கலக்கும் அந்நாள்.
விலக்கிடும் தீமைகள் வேண்டாம் இந்நாள்,
விலகச் செய்கிறார் இறைவன் முன்னால்.
துலக்கிடும் கலன்களின் அழகு எதனால்?
தூய ஆவியர் செயல்படுவதனால்.
அலக்கிட உள்ளம் கொடுப்பீர் இதனால்,
அந்நாளேதான் இனிய பொன்னாள்!
ஆமென்.

பிணி களைவோம்!

பிணி களைவோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:6
6 அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
இயேசு என்றால் எதுவெனக் கேட்கும்,
ஏழ்மையின் ஊர்கள் ஈங்குண்டே.
காசு பொருளே கடவுள் என்னும்,
கடை நிலையாளரும் ஆங்குண்டே.
ஆசு இரிய, இறை வாக்குரைக்கும்,
அன்புப் பணியில் பாங்குண்டே.
பேசுவதோடு நிற்கிறோம் நாமும்;
பிணி களையாவிடில் தீங்குண்டே!
ஆமென்.

ஏற்கவில்லை!

ஊரார் ஏற்கவில்லை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:5.5 உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:

உந்தன் அருளில் உரைக்கும் வாக்கை,

ஊரார் விரும்பி ஏற்கவில்லை.

மைந்தன் வழியில் கிடைக்கும் மீட்பை,

மயங்கும் மாந்தர் பார்க்கவில்லை.

செந்தமிழாகப் பாடிக் கொடுத்தும்,

செய்தி எவரையும் ஈர்க்கவில்லை.

எந்தையே இறையே, யான் தோற்றாலும்,

உந்தன் வாக்கு தோற்பதில்லை!

ஆமென்.

கையிலென்ன? பையிலென்ன?
கிறித்துவின் வாக்கு:லூக்கா 9:3-4.
3 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்.

எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.

கிறித்துவில் வாழ்வு:
கையில் தடியை எடுக்கவில்லை;
காப்பவர் நம்முடன் வருவதனால்.
பையில் பணமும் அடுக்கவில்லை.
படைத்தவர் நாளும் தருவதனால்.
மெய்யில் உயிரை வைத்தவர்தான்,
மேலாம் பணிக்கு அழைக்கின்றார்.
ஐயா, இதனை மறந்தவர்தான்,
அவப் பெயரோடு பிழைக்கின்றார்!
ஆமென்.

தரணி மீட்புற வேண்டும்! கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1 அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2 தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும்! ஆமென்.

விளம்பரம் செய்யாதீர்! கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:54-56. 54 எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். 55 அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். 56 அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். கிறித்துவில் வாழ்வு: நஞ்சை அமுதென விளம்பரம் செய்யும், நலம் கெடுப்பாரைப் போலின்று, அஞ்சும் பத்தும் வாங்கிக் கொண்டு, அதிசயம் என்று உரைக்காதீர். கொஞ்சங்கூடத் தற்புகழ் விரும்பா கிறித்துவின் கட்டளைக் கேட்டிட்டு, மிஞ்சும் மேட்டிமை நீவிர் கொண்டு, மீண்டும் நாய்போல் குரைக்காதீர்! ஆமென்.

உயிரின் உறைவிடம் இயேசு!

கிறித்துவின் வாக்கு:

லூக்கா 8:51-53.

52 எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.

53 அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். கிறித்துவில் வாழ்வு: கழன்று விழுந்திடும் கண்ணீரோடு, கவலை கொள்ளும் மானிடமே, உழன்று புரண்டு அழுவது நிறுத்து. உன் கண் ஏறெடு வானிடமே. சுழன்று அடிக்கும் சூறைக்காற்று, சொற்படி நிற்பது இறையிடமே. இழந்து போமோ ஏழையின் மூச்சு? இயேசு உயிர்க்கு உறைவிடமே! ஆமென்.

பற்றில் குறைவுள்ளேன்!

பற்றில் குறைவுள்ளேன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:49-50.
 
49 அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்.
50 இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
 
கிறித்துவில் வாழ்வு:
மாண்டவரை எழுப்புகின்ற,
மாவலிமை நிறையிறையே,
ஆண்டழிக்கும் அலகையினால்,
ஐயங்களில் விழுகின்றேன்.
வேண்டுகின்ற பற்றளவு,
வீணனிடம் இல்லைதான்.
மீண்டுமிதை அறிக்கையிட்டு,
மேலோனே, எழுகின்றேன்!
ஆமென்.

உம்மடி தொடுவேன்!

உம்மடி தொடுவேன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:45-48.
45 அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
46 அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
47 அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
48 அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
எந்தன் தீட்டை எண்ணுவதாலே,
எங்கும் அதனைக் கொட்டுகிறேன்.
உந்தன் மீட்பை வேண்டுவதாலே,
உம்மடி இழுக்கத் தொட்டிடுவேன்.
அந்த நாளின் பெண்மணிகொண்ட,
அரிய பற்றிலும் குறைவுற்றேன்;
மந்தமாக நான் இருந்தாலும்
மன்னிக்கிறீரே, நிறைவுற்றேன்!
ஆமென்.

Image may contain: 1 person, sitting

மருத்துவச் செய்தி!

மருத்துவர் லூக்காவின் மருத்துவச் செய்தி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:43-44.
43 அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,
44 அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.

கிறித்துவில் வாழ்வு:
வாடிய முகம் பார்த்து
வருந்துவார் பலருண்டு.
நாடித் துடிப்பறிந்து,
நலமுரைப்பார் சிலருண்டு.
தேடிய பொருள் இழந்தும்,
தெரியாக் குறையுண்டு.
ஓடிக் களைத்தவரே,
உமை மீட்க இறையுண்டு!
ஆமென்.

Image may contain: text, outdoor and water