வெட்கப்படாதீர்!

வெட்கப்படாதீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9.26-27.

26என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
27இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பற்றைப் பெற்றவர் மறைப்பதினால்,
பலபேர் நன்மை இழக்கின்றார்.
பெற்றக் கிறித்தவர் கொடுப்பதினால்,
பெரிதாய் வளர்ந்து தழைக்கின்றார்.
சற்றும் வெட்கம் கொள்ளாமல்,
சான்றாய் வாழ வருபவர் யார்?
முற்றுப் பெறாத இறையரசில்,
முடியா வாழ்வு பெறுபவரார்!
ஆமென். 


இலங்கைக்கு இரங்கும் இறைவா!

இலங்கைக்கு இரங்கும் இறைவா!
கொல்லும் வெறியை அறமெனச் சொல்லும்,கொள்கை உள்ளோர் பெருத்திட்டார்.வெல்லுவதொன்றே இலக்காய் எண்ணி,விண்ணின் அறத்தை மறுத்திட்டார்.சொல்லும் செயலும் வேறாய்ப் போனச்சொற்பொழிவாளரே ஆளுகின்றார்.இல்லா அறத்தை இவர்களில் தேட,எளியோர் இலங்கையில் மாளுகின்றார்!
-கெர்சோம் செல்லையா.

தன்னைக் கெடுத்து…..

தன்னைக் கெடுத்து யாவும் பெறுதல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:25.

25மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

கிறித்துவில் வாழ்வு:
ஊரை மடக்கி, உலையில் போட்டும்,
உண்ண ஒருசிறு பருக்கையில்லை.
பாரை அளந்து, பக்கம் வைத்தும்,
பாங்காய் அமரவும் இருக்கையில்லை.
வேரை வெட்டி, மரத்தினை நாட்டும்,
வீண் செயலெல்லாம் வளர்ச்சியில்லை. 
தேரை உண்ணும் பாறைக்குள்ளும்,
தெய்வம் தரவே, தளர்ச்சியில்லை! 
ஆமென்.

நெஞ்சில் என்னை அவிக்கின்றேன்!

நெஞ்சில் எனையே அவிக்கின்றேன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:23-24.
3 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

கிறித்துவில் வாழ்வு:
எனக்கென வந்தச் சிலுவையினை,
எடுத்து நன்மை செய்தேனா?
தனக்கென வாழ்ந்துத் தேய்ந்ததினால்,
தடுமாறும் நான் உய்வேனா?
மனக் கணக்கிட்டுப் பார்க்கின்றேன்;
மன்னிப்பிற்காய்த் தவிக்கின்றேன்.
நினைக்கவே வெட்கம் மூடுவதால்,
நெஞ்சில் எனையே அவிக்கின்றேன்!
ஆமென்.

நாளை நடப்பதை நாமறியோம்!

நாளை நடப்பதை நாமறியோம்!


கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:22.

22மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.

கிறித்துவில் வாழ்வு:
நாளை நடப்பதை நாமறியோம்.
நடப்பதுங்கூடத் தானறியோம்.
வேளை வருவதை அறிந்தவராய்,
விண்ணின் கோனோ முன்னுரைத்தார்.
வாளை நம்பி விழுபவரோ,
வலிமையாகப் படை சேர்ப்பார்.
ஆளை மீட்க வந்தவரோ,
அப்படியின்றி, அன்புரைத்தார்!
ஆமென்.

அடங்கியது அடியனின் ஐயம்!

அடங்கிவிட்டது அடியனின் ஐயம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:20-21.

20அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
21அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.

கிறித்துவில் வாழ்வு:
கடந்து உள்ளில் வாழும் கடவுள்,
காணும்படியாய் வருவாரா?
நடந்து வந்து நம்முன் தோன்றி,
நன்மையை நமக்குத் தருவாரா?
கிடந்தது புரண்டு கேள்விகள் கேட்டேன்;
கிறித்து நெஞ்சில் வருமுன்னர்.
அடங்கிவிட்டது அடியனின் ஐயம்;
ஆண்டவர் இயேசுவே என் மன்னர்!
ஆமென்.

யாரென நினைக்கிறார்?

என்னை யார் என்று நினைக்கிறார்கள்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:18-19.

18 பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
அவரவர் கோணத்தில் பார்த்துவிட்டு,
அதுவே சரியெனப் பேசுகின்றோம்.
சுவரென யானையைத் தடவிவிட்டுச்
சொல்லால் வண்ணம் பூசுகின்றோம். 
தவறுகள் எவையென அறிவதற்குத்
தந்தையின் பார்வை பெற்றிடுவோம்.
எவரது கருத்து உண்மையென்று,
இறைவாக்கால் நாம் கற்றிடுவோம்!
ஆமென்.

உணவு!

வாழ்வது உணவிற்கா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:16-17.
16. அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.

17. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடைநிறைய எடுக்கப்பட்டது.
கிறித்துவில் வாழ்வு:
வாயிலும் வயிற்றிலும் அடித்தவராய்,
வாழ்வது உணவிற்கேயென்று, 
நாயினைப் போன்று ஊளையிடும் 
நன்றி மறக்கும் மானிடரே, 
ஆயிரம் கோடி உயிர் எனினும்,
அன்றைய உணவை அளந்தளிக்கும்,
தாயினும் மேலாம் இறையன்பு,
தருவதை மறப்பதுதான் இடரே!
ஆமென்.

LikeShow More ReactionsComment

பசியாற்றும் இயேசு!

பசியாற்றும் இயேசு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:12-15.
12 சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
13 அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங் கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள்.
14 ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.

15 அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
இல்லை உணவு என்றாலும்,
இயேசுவின் அடியார் நம்புகிறார். 
எல்லோருக்கும் படியளக்கும்,
இறைமுன் பந்தி அமருகிறார்.
சொல்லால் உணவு படைப்பவரின்,
சீர்மிகு செயலைக் காணுகிறார்.
பொல்லா ஐயம் கொண்டவர்தான்,
புசியாதிருந்து நாணுகிறார்!
ஆமென்.

தனிமை தேடிய இயேசு!



10தனிமை தேடிய இயேசு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:10-11.
அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார்.
11ஜனங்கள் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்.

கிறித்துவில் வாழ்வு:
தனிமை விரும்பும் வேளையிலும்,
தவிக்கும் மக்கள் வருகின்றார்.
இனிமை வாழ்வு இவரடைய,
இயேசு இறை வாக்கருள்கின்றார்.
மனிதர், வாழ்வில் ஓய்வமைதி 
மாபெரும் பேறாய் அடைந்தாலும்,
புனிதர் வாக்கு உரைப்போர்க்கு,
புவியில் ஓய்வு கிடையாதே!
ஆமென்.