பயன்தரும் வாழ்வு!

நிலை நாட்டுகிறீர்!

கிறித்துவின் வாக்கு:

லூக்கா 13:6-9.

6அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.
7அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
8அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,
9கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
கனியற்ற பாழ்மரமாக இருந்தும்,
கனிவுடன் ஆண்டுகள் நீட்டுகிறீர்.
இனிமேலாவது பயன் தருவேனென,
எனது நாளையும் கூட்டுகிறீர்.
தனியனாய் என்னால் இயலாதென்றும்,
தலையினுள் அறிவு ஊட்டுகிறீர்.
பனிமழை, மண்வளம், உமது அருளே;
பணிவோரை நிலை நாட்டுகிறீர்!
ஆமென்.

அவர்களைப் பார்த்து!

அவர்கள் அநீதர், அதனால் இறந்தார்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:4-5.

4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?

அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
அவர்கள் அநீதர், அதனால் இறந்தார்;
அப்படிச் சொல்லி மழுப்பாதீர்.
எவர்கள் எப்படிப் போனாலென்ன,
என்று நினைப்பினும் அழுக்காவீர்.
தவற்றை உணரார், தம்மைத் திருத்தார்.
திருந்தாவிட்டால், இழுக்காவீர்
இவற்றினின்று யார்தான் மீள்வார்?
இயேசுவைப் பார்ப்பீர், வெளுப்பாவீர்!
ஆமென்.

நம்மைவிடவும் நேர்மையுள்ளோர்!

நம்மைவிடவும் நேர்மையுள்ளோர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:1-3.

1பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
2இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
3அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
நம்மை விடவும் நேர்மையுள்ளோர்,
நமக்கு முன்பே விடை பெற்றார்.
இம்மை வாழ்வு இலைமேல் தண்ணீர்;
என்றுகூறியே கடை விற்றார்.
செம்மை வாழ்வு இறையால் பெறுவார்,
செல்லுமிடத்தை நன்கறிவார்.
அம்மாப் பெரிய அருளடைவதினால்,
ஆண்டவருடனே இங்குறைவார்!
ஆமென்.

ஒப்புரவு!

சட்டம் தன் கடமையைச் செய்யும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:58-59.

58உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான்.
59நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
சட்டமென்னை என்ன செய்யும்?
சரிதான் போய்யா என்பவரே,
திட்டமிட்டவர் இறைவன் ஆகும்;
திமிராய் நடப்பின் தண்டனையே.
கெட்டநேரம் துரத்தும் முன்னே,
கேட்டுப் பெறுவீர் ஒப்புரவே.
விட்டுவிட்டால், கட்டி விடுவார்;
விடுதலை இல்லை அப்புறமே!
ஆமென். 

எப்படி இருக்கும் 2020?

எப்படி இருக்கும் 2020?


வந்த இவ்வாண்டு எப்படி இருக்கும்?

வழியறியாதோர் கேட்கின்றார்.

முந்தைய நாட்களில் விதைத்தது விளையும்;

மும்மை தெய்வம் ஆள்கின்றார்.

எந்த நன்மையை எவர்க்களித்தோமோ,

இரண்டல்ல, நூறெனத் தருகின்றார்.

ஈந்தது தீமை என்றாயிருந்தால்,

இறைவன் உணர்த்த வருகின்றார்!


-கெர்சோம் செல்லையா.

2020

2020 புத்தாண்டு வாழ்த்துகள்!


எழுபது நெருங்கும் கிழவன் நானும்,

இருபது இருபதை வாழ்த்துகிறேன்.

செழுமையின் நாட்கள் யாவரும் காண,

சேயோன் முன் தலை தாழ்த்துகிறேன்.

அழுகுரல் கேளா ஆட்சியைக் கேட்டு,

அவரிடம் நாளும் வேண்டுகிறேன்.

தொழுவோர் தொண்டில் நாடும் மகிழ,

தூய ஆவியால் தாண்டுகிறேன்!


-கெர்சோம் செல்லையா.

மெய் அறிந்தோமா?

அறிந்தோமா?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:54-57.

54பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்.
55தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாக்குமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும்.
56மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன?
57நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன?

கிறித்துவில் வாழ்வு:
காற்றை அறிந்தோம்;
கடலில், கரையில் சீற்றம் அறிந்தோம்.
தோற்றம் அறிந்தோம்;
தொலை வானேறி மாற்றம் அறிந்தோம்.
ஏற்றம் அறிந்தோம்;
ஏறும் மனிதரின் ஆற்றலும் அறிந்தோம்.
போற்றும் மனிதர் நாம்;
பொய்யினின்று, மெய்அறிந்தோமா?
ஆமென்.

கிறித்து பிறப்பு!

கிறித்து பிறப்பு வாழ்த்துகள்!


பிறப்பின் நோக்கம் புரியாமல்,

பேசித் திரியும் மாந்தரினை,

இறப்பின் வழியாய் மீட்பதற்கு,

இறையே மகனாய், புவி வந்தார்.

திறப்பின் வாசல் எதுவென்று,

தெரிந்து நடக்கும் அடியவரை,

சிறப்பின் வாழ்வில் சேர்ப்பதற்கு,

சிறுமையாகியே தமைத் தந்தார்!


-கெர்சோம் செல்லையா.

கிறித்து பிறப்பு வாழ்த்துகள்!

அன்பர்கள், நண்பர்கள், என்கிற உறவுகள்,

இன்பமாய் வாழ, எளியனின் வாழ்த்துகள்!


விண் மாட்சி என்னும் விருப்பம் செய்வோம்;

மண் ஆட்சி எதிலும் அமைதி நெய்வோம்.

கண் காட்சி  நிலைக்கும் அன்பைப் பெய்வோம்.

நன் மீட்சி வழங்கும் இறையால் உய்வோம்!

கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள்!

பற்றிழந்தோர் பிரிக்கிறார்!

பற்றிழந்தோர் பிரிக்கிறார்! 

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:51-53.

51நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.52எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பற்றை இறைவன் பகிரும்போதே
பலபேர் பகடியாய்ச் சிரிக்கிறார்.
உற்றாரில் சிலர் உதவாதென்றே,
உண்மையைச் சினந்து எரிக்கிறார்.
குற்றம் இல்லா இயேசுவின்மீதே,
குற்ற வலையை விரிக்கிறார்.
வெற்றிடமாக வாழ்வை இழந்தே,
விண்ணின் அமைதியும் பிரிக்கிறார்!
ஆமென்.