பயனற்ற பணியாளன்!

பயனற்ற பணியாளன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:7-10.

7   உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?

8   நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா?

9   தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.

10  அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

கடமையைச் செய்த மகிழ்ச்சிகூட 

கயவன் எனக்கு வரவிலையே.

உடமைகள் தேடி ஓடினதாலே,

ஊழியப் பொறுப்பும் தரவிலையே.

மடமையில் விழுந்த அடியனை மீட்டு,

மன்னா பொழிந்தீர் செம்பொருளே.

தடைகள் இட்டுத் தடுப்பவரெனினும்,

தமிழால் மொழிவேன் உம்மருளே!

ஆமென்.

கடுகளவு பற்று!

கடுகளவு பற்று வேண்டும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:5-6.

5   அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.

6   அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

கிறித்துவில் வாழ்வு:

காட்டத்தி மரத்தை வேருடன் பிடுங்க,

கடுகளவில் பற்று தாருமென்பேன்.

நீட்டத்தில் குறைந்த நிலையிலா வாழ்வில்,

நிகழும் செயல்கள் பாருமென்பேன்.

ஆட்டத்தில் அமிழ்வோர் அறிவினில் எழும்ப,

அவருக்கும் தூது கூறுமென்பேன்.

ஓட்டத்தின் முடிவில் உம்மைக் காண்பேன்;

உலகை மீட்க வாருமென்பேன்!

ஆமென்.

பொறுத்தல்!

கனிவாய்ப் பொறுப்போம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:4.

4   அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:
எத்தனை முறை நாம் இறையிடம் சென்று,
என்னை மன்னியும் என்றோமே.
அத்தனை முறையும் அவரும் இரங்கி,
அனைத்தையும் நமக்குப் பொறுத்தாரே.
இத்தனை என்று எண்ணி முடியா,
மொத்தமும் நம்மிடம் இருக்கையிலே,
கத்துதல் நிறுத்தி, கடவுளை வணங்கி,

கனிவாய் உறவைப் பொறுப்பீரே!
ஆமென்.

எது வேண்டும்? மது வேண்டும்!

எது வேண்டும்?  மது வேண்டும்!

எது வரைக்கும் எம்மிறையே, 

எது வரைக்கும் எம்மிறையே?
பொது வெளிக்கு வர வேண்டாம்,
போவோர்க்கு அடி உண்டாம்.

இது என்னத் தடைச் சட்டம்?

ஏன் தடுத்தீர் பெருங்கூட்டம்.?

எது வரைக்கும் எம்மிறையே, 
எது வரைக்கும் எம்மிறையே?

புது நோயின் பெயர் சொன்னார்;
புவிமுழுதும் பரவுதென்றார்.

அது கேட்டோர் மூடுகின்றார்;

ஆயினும்பின் கேடு என்றார்.

எது வரைக்கும் எம்மிறையே, 
எது வரைக்கும் எம்மிறையே?
பதுமை போல் விழ வைத்தார்;
பட்டினியில் அழ வைத்தார்.

மது குடிப்பின் போகுமென்றார்.
மடையர்களும் ஆகுமென்பார்!

எது வரைக்கும் எம்மிறையே,
எது வரைக்கும் எம்மிறையே, 


கெர்சோம் செல்லையா.

எதுவரைக்கும் கடவுளே?

எதுவரைக்கும் கடவுளே?

எப்படி வந்தது நாம் அறியோம்;

எதனால் தொற்றுது என்றறியோம்..

இப்படி எண்ணி வினவுகிறோம்.

ஏன், ஏனோ, விடை இல்லை.

அப்படி வாழும் சூழ்நிலையில்,

ஆண்டவரே இது எதுவரைக்கும்?

தப்ப வைப்பாரிடம் கேட்டறிவோம்;

தரணிக்கு வேறு வழியில்லை!

எதுவரைக்கும் கடவுளே?

எப்படி வந்தது நாம் அறியோம்;

எதனால் தொற்றுது என்றறியோம்..

இப்படி எண்ணி வினவுகிறோம்.

ஏன், ஏனோ, விடை இல்லை.

அப்படி வாழும் சூழ்நிலையில்,

ஆண்டவரே இது எதுவரைக்கும்?

தப்ப வைப்பாரிடம் கேட்டறிவோம்;

தரணிக்கு வேறு வழியில்லை!

-கெர்சோம் செல்லையா.

மன்னிப்பு!

மன்னிப்பு!கிறித்துவின் வாக்கு: லூக்கா 17: 3.3 உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.

கிறித்துவில் வாழ்வு:

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,

அன்பின் உறவில் இணைந்திருந்தும்,

மண்ணின் சொத்து பிரிக்கும்போது,

மனங்கள் ஒன்றாய் இருக்கலையே.

விண்ணின் வாழ்வே வாழ்வு என்று,

வீர முழக்கம் செய்திருந்தும்,

இன்றுவரையில் மன்னிக்கின்ற,

இளகிய நெஞ்சு பிறக்கலையே!

ஆமென்.

இயலாமை!

நோயும் வறுமையும்!
இல்லாமையின் கொடுமைக்கு,
இழுத்துச்செல்லும் தொற்றிற்கு,
நல்லாயனே முடிவெழுதும்.
நம்புகிறோம் கேட்டருளும்.
எல்லாமறிந்த வல்லவரும்,
எதுவும் செய்ய இயலாமல்,
செல்வாக்கின்றிக் கிடக்கின்றார்;
செயலிறையே மீட்டருளும்.
-கெர்சோம் செல்லையா.

தடுக்கும் கல்!

இடற வைக்கும் கல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:1-2.

1   பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

2   அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்.

கிறித்துவில் வாழ்வு:

ஒடுக்கப்பட்ட ஏழைகளை 

ஒன்றிற்குதவார் என்றெண்ணி,

தடுக்கல் இட்டுப் பின்தள்ளும்,

தவற்றின் உருவாம் மானிடரே,

எடுக்கும் அந்தப் பாறாங்கல்,

எந்திரக் கல்லாய் உம் கழுத்தில்,

அடுக்கப்பட்டு கடல் தள்ளும்,

அழிவை உணர்ந்தால், ஏனிடரே?

ஆமென்.

காணாத தொற்று!

கொரோனா தரும் அறிவு!


காணாத தொற்றுநோய் ஓன்று,

கடவுளைக் காட்டுதே இன்று.

பேணாத அவ்வறிவில் நின்று,

பேசவும் வைக்குதே இன்று.

கோணாத உதவிகள் நன்று;

கொரோனா சொல்லுதே இன்று.

நாணாது வழங்குவீர் என்று,

நாடும் வேண்டுதே இன்று!


-கெர்சோம் செல்லையா.

திருமறையுண்டு!

திருமறையுண்டு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16: 29-31.

29  ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.

30  அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.

31  அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

கையில் திருமறை நூலுண்டு.

கருத்தோ எதிர்மறை வேறுண்டு.

பையில் நிறையப் பொருளுண்டு.

பகிரும் அன்பு எங்குண்டு?

மையில் கருமை நிறமுண்டு.

மனமும் அதுபோல் தானுண்டு.

செய்யுள் வழியும் கேட்பதுண்டு.

செயல்படுவோர்கள் எங்குண்டு?

ஆமென்.