விண்ணப்ப வீடு!

விண்ணப்ப வீடே இறைவீடு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:45-46.

45  பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி:

46  என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

விண்ணப்ப வீடே இறைவீடு;

விருப்பம் கூடும் நிறைவோடு.

நன்னப்பர் அருளும் அன்போடு,

நலம்பெற நாளும் மன்றாடு.

பொன்னப்பரென்ற சிலரோடு,

பொய்மை வரவே பலகேடு.

மன்னிப்பு தருகிற மொழியோடு,

மனதைச் சேர்ப்பதே வழிபாடு!

ஆமென்.

வந்திடும் விளைவு!

வந்திடும் விளைவு அறியார்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:41-44.

41  அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது,

42  உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.

43  உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,

44  உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

சந்திக்கும் காலம் அறியாமல்,

சட்டென வீழ்ந்தோர் பலருண்டு.

முந்தி நாம் சொல்லியும் ஏற்காமல்,

முடிந்து போனோர் சிலருண்டு.

வந்திடும் விளைவு எண்ணாமல்,

வாழ்ந்தால் என்ன விலையுண்டு?

எந்திரம் என்றெனப் பணியாமல்,

இறை அறிவோம், நலமுண்டு!

ஆமென்.

கல்லாய்ப் போனோர்!

கல்லாய்ப் போன நெஞ்சுள்ளார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:39-40.

39  அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள்.

40  அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

கல்லாய்ப் போன நெஞ்சுள்ளார்,

கடவுள் பெயரால் வருகின்றார்.

சொல்லால் வடித்த பொய்களுடன்,

செயலில் தீங்கும் தருகின்றார்.

இல்லார் பற்றில் உயர்ந்துள்ளார்;

இதனால் இயேசுவை அடுக்கின்றார்.

பொல்லார் தடுக்க முயன்றாலும்,

புனிதர் நற்பதில் கொடுக்கின்றார்!

ஆமென்.

புகழ்வோம்!

இறைமகன்  போற்றும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:36-38.

36  அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.

37  அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,

38  கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

ஊரை விற்று உலகை வாங்கும்,

உண்மைக் காட்சி காணும் நாம்,

யாரைக் கொண்டு வந்தால் நீங்கும்,

எளியோர் வறுமை என்கின்றோம்.

பாரை மீட்கப் பரனை வாழ்த்தும்,

பண்பாளரைப் பார்க்கும் நாம்,

தாரை ஊதித் தமிழிலழைப்போம்;

தருவார் வாழ்வு, நன்கென்போம்!

ஆமென்.

வேண்டுமென்று கேட்கிறார்!

வேண்டுமென்று கேட்கிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:32-35.

32  அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள்.

33  கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

34  அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,

35  அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

வேண்டுமென்று கேட்கிறார் இயேசு;

விரும்பி உன்னை அளிப்பாயா?

ஆண்டுகொள்ளும் அரசே என்று,

அடிமை போன்று விளிப்பாயா?

கூண்டுகளிலே அடைப்பதுமுண்டு;

குழம்பி நீயும் ஒளிப்பாயா?

மாண்டுபோவார் மடிவது தடுத்து,

மனம் திருந்தக் களிப்பாயா? 

ஆமென்.

விடுதலை நாள் வாழ்த்து!

இந்திய விடுதலை நாள் வாழ்த்து!

அரசியல் விடுதலை வந்ததென்று,

அனைவரும் கூடிப் பாடுகிறோம்.

பொருளியல் விடுதலை வருமென்று,

புரண்டுழைத்துத் தேடுகிறோம்.

ஒருவொருக்கொருவர் இணையென்று,

ஊர் எண்ணாததால் வாடுகிறோம்.

திருவருள் தருவதே நலமென்று,

தெய்வீக விடுதலை நாடுகிறோம்.

-கெர்சோம் செல்லையா.

www.thetruthintamil.com

சிறிய கழுதை போதும்!

சிறிய கழுதை போதும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:29-31.

29  அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:

30  உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.

31  அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

எதை விரும்பி எடுப்பீர் என்று 

இங்கொரு தேர்தல் நாம் வைத்தால்,

குதிரை போதும், கழுதை வேண்டாம்,

குதித்துச் சொல்வார் மக்களின்று.

பதை பதைக்கும் சண்டைகள் கண்டு,

போரா, அமைதியா எனக்கேட்டால்,

சிதை விரும்பார் சீக்கிரம் சொல்வார்,

சிறிய கழுதை போதுமென்று.

ஆமென்.

எனக்கு அரசன் யார்?

எனக்கு அரசன் யார்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:27-28.

27  அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.

28  இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.

கிறித்துவில் வாழ்வு:

நானே எனக்கு அரசன் என்று,

நம்பி நடப்பது குறையாகும்.

தானே செல்பவன்போல இன்று,

தன்னை அடைக்கும் சிறையாகும்.

வானே நமது வாழ்விற்கென்று,

வகுத்த வழிதான் முறையாகும்.

தேனே தோற்கும் இனிமை இன்று,

தெரியும் நல்லிடம் இறையாகும்!

ஆமென்.

வளர்க!

வளர்க!!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:25-26.

25  அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.

26  அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:

பற்று வளர, பண்பும் வளரும்;

பற்றியவரின் வாழ்வும் மலரும்.

அற்று போகும் இடமும் நோக்கும்;

அழிவு என்றே பெயருண்டாக்கும்.

பெற்று வாழும் கிறித்தவர் காணும்;

பிசாசும் கூட அவர்முன் நாணும்.

கற்று நீவிர் பற்றில் தேறும்.

கடவுளுக்கு நன்றி கூறும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

www.thetruthintamil.com

ஒன்றும் போதும்!

ஒன்றும் போதும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:20-24.

20  பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.

21  நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.

22  அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,

23  பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக் கொள்வேனே என்று சொல்லி;

24  சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

ஓன்று மட்டும் உள்ளது என்று,

உறங்கும் இன்றைய கிறித்தவமே,

நன்று என்று நன்மைகள் செய்ய,

ஓன்றும் போதும் உன்னகமே.

கன்று ஈன்ற பசுக்கள்கூட,

கனிவாய்ப் பாலைக் கொடுக்கையிலே,

இன்று உந்தன் அன்பினாலே,

யாவும் வெல்வாய், தடுக்கலையே!

ஆமென்.