கொரோனா!

தொற்றாது தொற்று நோய்!

இறைவாக்கு: சங்கீதம்/திருப்பாடல் 91

இறைவேண்டல்:

இத்தனை ஆண்டுகள் இங்கே வாழ்வாய்,

என்று அனுப்பிய என் இறையே,

அத்தனை காலம் நலமாய் வாழ்வேன்,

அதனால் இல்லை, ஒரு குறையே.

எத்தனை விதமாய் நோய் வந்தாலும்,

எனக்கு மருந்து உன் மறையே.

பித்தன் என்று பிறர் பழித்தாலும்,

பெருகும் அருளால் எனை நிறையே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பழுத்த அன்பு!

பழுத்த அன்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15: 18-20.

18  நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.

19  இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;

20  எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

கிறித்துவில் வாழ்வு:

அழுக்கு உடையில், அவல வடிவில்,

ஆங்கே ஒருவன் தெரிகின்றான்.

கழுத்து நீட்டிக் காத்தவன் தந்தை,

கண்டு மகனென அறிகின்றான்.

இழுத்து மூடி, ஒளித்திராமல்,

எழுந்து ஓடி அணைக்கின்றான்.

பழுத்த அன்பு, தந்தையில் கண்டேன்;

பரமனும் இதுபோல் இணைக்கின்றான்!

ஆமென்.

பட்டினிக் காலம்!

பட்டினிக் காலம்!

கிறித்துவி வாக்கு: லூக்கா 15:16-17.
16  அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.17  அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
கிறித்துவில் வாழ்வு:
அட்டிலில் உணவு பெருக்கெடுத்து,
அழகு தட்டினில் வழியும்போது,
கொட்டினார் அதனை வெளிப்புறத்து,
கொடாது ஏழை எளியவருக்கு.
பட்டினிக் காலம் என்று ஓன்று,
பலரது வாழ்வில் வரலாமென்று,
சுட்டினார் உவமை கிறித்து அன்று;
சுவையும்கூட மிகமிக நன்று!
ஆமென்.

மதியிலார் நிலை!

மதியிலார் நிலை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:13-15.

13  சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

14  எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,

15  அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.

கிறித்துவில் வாழ்வு:

தந்தையின் அன்பை ருசிக்கும் வேளை,

தருவது குறைவென நினைப்போரே,

சொந்தக் கைகள் செய்யும் வேலை,

சொல்கிற செய்தியும் நினைப்பீரே.

அந்தத் தொழிலை இழிவாய்க் கருதி,

அவன் நிலைக்காக அழுவோரே,

மைந்தன் ஒருவன் அடிமையாகும்,

மதி இழப்பிற்கும் அழுவீரே!

ஆமென்.

உடன்பாடில்லா நிலையில்!

உடன்பாடில்லா நிலையில்

கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:11-12.

11  பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.

12  அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.

கிறித்துவில் வாழ்வு:

அடங்காப் பிள்ளையை அடிக்கச்சொன்னது,

ஆண்டவர் அருளிய திருச்சட்டம்.

உடன்பாடில்லா நிலை வந்தாலும்,

உரிமை கொடுப்பதோ அருட்திட்டம்.

முடங்காதவனாய் மறைநூல் கற்றும்,

முதியனின் அன்பு எனில் இல்லை.

கடன்காரன் நான், கனிய உதவும்.

காண்பார் வாழ்வில் உம் சொல்லை!

ஆமென்.

விளக்கு!

விளக்கு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:8-10.
8   அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?9   கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?10  அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.


கிறித்துவில் வாழ்வு:

காணாமல்போன, காசைத் தேட,

கையிலெடுத்தாள் விளக்கு.

தானாக வருமே என்றுயிராமல்,

தன்வீடு துடைத்ததை, விளக்கு.

கோணாமல் நேர்வழி செல்லுவதற்கு,

கொளுத்த வேண்டும் விளக்கு.

நாணாத வாழ்வை, நம்மிறை தருவார்;

நன்மை செய்து விளக்கு!

ஆமென்.

கருப்பு ஆட்டின் கதை!

கருப்பு ஆட்டின் கதை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:5-7.
5 கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,6 வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கிறித்துவில் வாழ்வு:
இருப்பு இருந்தால், இன்பம் ஆகும்;
இழந்து பெற்றால், இரட்டிப்பாகும்.
கருப்பு ஆட்டின் கதையிது ஆகும்;
கடவுட்மீட்போ, பேரின்பமாகும்.
விருப்பு மாறின் என்ன ஆகும்?
விழுந்த ஆட்டின் கதைபோலாகும்.
திருப்புவதுவும் இறைமகன் ஆகும்;
திரும்புதலுமோ பேரின்பமாகும்!
ஆமென்.

இயேசுவே எனது நல்மேய்ப்பர்

இயேசுவே எனது நல் மேய்ப்பன்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:3-4.

3   அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:

4   உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?

கிறித்துவில் வாழ்வு:

ஒராடுதானே ஓடியதென்று,

ஓய்ந்திருப்பானோ ஒரு மேய்ப்பன்?

போராடியேனும் அதனை மீட்க,

புறப்படுவானே நம் மேய்ப்பன்.

யாராயிருப்பினும் புறக்கணிக்காது,

எழுந்து மீட்கிறார் இறை மேய்ப்பன்.

நூறாயிரம் பாடல் எழுதிச் சொல்வேன்;

இயேசுவே எனது நல் மேய்ப்பன்!

ஆமென்.

நமது பார்வை!

எப்படிப் பிறரைப் பார்க்கிறோம்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:1-2.

1   சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.

2   அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

எதிரே நிற்போர் ஏழை என்றால்,

எவரும் திரும்பிப் பாராரே.

புதிரை நம்பும் சாதியர்கூட,

புனிதம் பேசிச் சேராரே.

மதிப்பார் என்ற சொல்லினுள்ளே,

மதி இருத்தல் அறியாரே,

விதிக்காக நான் சொல்லவில்லை;

விண்முன் யாவரும் சிறியாரே!

ஆமென்.

உப்பும் நாமும்!

உப்பாயிருப்போம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா14:34-35.

34  உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?

35  அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப் போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

உப்பின் ருசியை உணவில் கலக்க, 

உண்பவர் வாயில் தேன் ஊறும்.

அப்புறம் உண்பேன் என்பவர்கூட,

அன்பாய்க் கெஞ்சும் நிலை பாரும்.

சப்பென உணவு சுவையற்றிருந்தால்,

சாப்பிடும் வாய்கள் குறை கூறும்.

குப்பையென்று கொட்டாதிருக்க,

கொஞ்சம் உப்பாகவே மாறும்!

ஆமென்.