இயேசு யார்?

இயேசு யார்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:66-71.  

66  விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:

67  நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.

68  நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.

69  இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.

70  அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.

71  அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

கொன்றுபோடும் எண்ணம் கொண்டு,  

கொடியோர் கேட்ட கேள்வியினை,  

இன்று நமது நாட்டோர் கேட்டால் ,  

என்ன சொல்வீர் இயேசுவினை?  

அன்று இயேசு மொழிந்தது போன்று, 

அவரை இறைமகன் என்றழைப்பேன். 

நன்று என்று ஏற்கும் வரைக்கும்,  

நாட்டோருக்கு நான் உழைப்பேன்!  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா. 

எந்தன் வாயைப் பூட்டுமே!

எந்தன் வாயைப் பூட்டுமே!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:63-65.  

63  இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து,

64  அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி,

65  மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

கண்ணைக் கட்டி முகத்திலறைந்து,

கடுஞ்சொல் எடுத்துத் திட்டவே,  

விண்ணின் அரசர் பேசாதிருந்தார்;   

விடுதலை வாழ்வு காட்டவே.    

மண்ணின் மக்கள் நம்மைச் சுற்றி,  

மதியிலா வாக்கு கொட்டவே,    

எண்ணிப் பார்ப்போம் இயேசுவையே;   

எந்தன் வாயும் பூட்டுமே!    

ஆமென்.   

-கெர்சோம் செல்லையா.  

திரும்பிப் பார்க்கிறார்!

திரும்பிப் பார்க்கிறார்!  

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:61-62.  

61  அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து,

62  வெளியே போய், மனங்கசந்து அழுதான்.  

கிறித்துவில் வாழ்வு:  

திரும்பிப் பார்த்த இயேசுவைக் கண்டு,  

திருந்தி அழுதார் பேதுரு.  

விரும்பிப் பார்க்கும் விண்ணோன் கண்டு,  

வேண்டிக் கேட்டால் புதுவுரு.  

அரும்பித் தோன்றி மலரும் முன்னே, 

அழியச் செய்யார் அழைப்பு. 

கரும்பின் சாறாய் கனி தருவோமே.   

கடவுளுக்கதுதான் உழைப்பு!  

ஆமென்.

மரம் வெட்டுகிறேன்!

மரம் வெட்டுகிறேன்!  
காயும் வெயிலிற்கு, காற்றாகும் என நினைத்தேன்.
சாயும் நிலை வந்து, சரிந்து நீ போனாயே.  
பாயும் மின்னிணைப்பு , பற்றிடுமோ எனத் தவித்தேன்;  
ஆயும் நிலையிழந்து,  அகற்ற நான் வெட்டுகிறேன்.  
வாயும் வயிறு என்று, வருந்துகிற மனிதருக்கு,  
நீயும் நிழல் கொடுத்து, நெடுநாட்கள் பணிபுரிந்தாய். 
நாயும் விலங்குகளும், நன்றியில் உனைப் பார்க்கும்.   
தேயும் மனிதரிடம் தேடாதே, நான் கொட்டுகிறேன்.  

-கெர்சோம் செல்லையா.  

மறுதலித்தல்!

இயேசுவை அறியேன் என்பவரே!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:56-60.  

56  அப்பொழுது ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்.

57  அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான்.

58  சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.

59  ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.

60  அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.  

கிறித்துவில் வாழ்வு:  

மும்முறை அறியேன் என்றுரைத்த,  

மூத்த அடியார் நிலைவந்தால்,  

எம்முறை எடுப்போம் என்பதனை,  

எண்ணிப் பார்ப்போம் கிறித்தவரே.  

நம்முளிலுறையும் கிறித்துவினை,  

நாமே மறுத்து நலந்துறந்தால், 

செம்முறைகூறும் தீர்ப்பு வரும்;  

சிந்திப்பீர், சீர் பறித்தவரே! 

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.     

துணிவு!

துணிந்து செல்லுதல்!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:54-55.  

54  அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.

55  அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.  

கிறித்துவில் வாழ்வு:  

தொடர்ந்து செல்லும் துணிவை அங்கே,  

தூயோன் பேதுருவிடம் கண்டோம்.  

கிடந்தது தேம்பி அழுது நிற்காமல்,  

கிறித்துவைத் தொடரும் நிலை கண்டோம்.   

இடர் நிறைந்த இடங்களிலெல்லாம்,  

எப்படி இயேசுவின் பின் செல்வோம்? 

சுடரொளியாய் வெளிச்சம் தருவார்;  

சுட்டும் வழியில்  நாம் செல்வோம்!  

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.  

இருளின் மக்கள்!

இருளின் மக்கள்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா  22:52-53.  

52  பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே.

53  நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கைநீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார்.  

கிறித்துவில் வாழ்வு: 

நெருப்பாம் பகையை நெஞ்சுள் வைத்து,

நெய்போல் பகலில் உருகிடினும்,

கருப்பாம் புகையை மறைக்கத் தவித்து,

கயமையை இரவில் கக்கிடுவார்.  

பொறுப்பாய்ப் பெற்ற பதவியை வைத்து,

புனிதர் போன்று நடித்திடினும்,  

வெறுப்பால் விளைந்த வெறியும் இழுத்து,

வீதியில் போட, நக்கிடுவார்!  

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.

தற்காப்பென்று….

தற்காப்பென்று வாளெடுக்காமல்!   

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:48-51.  

48  இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.

49  அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.

50  அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்.

51  அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.  

கிறித்துவில் வாழ்வு:  

தற்காப்பென்று வாள் எடுத்தவரின்,  

தவற்றைக் கண்டு தடுத்தவரே,  

நற்காப்பென்று நீர் இருக்கையிலே,   

நான் ஏன் ஆயுதம் எடுக்கின்றேன்?  

முற்காலங்கள் காட்டும் தவற்றை,

முரண்டு தொடர்ந்து பிடிக்காமல்,  

பொற்காலந்தரும் அமைதி காண,  

புரிந்து அன்பில் தடுக்கின்றேன்! 

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

எத்தனை எத்தனை யூதாசோ?

எத்தனை எத்தனை யூதாசோ?  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:47-48.  

47  அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்.

48  இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

காட்டிக் கொடுக்க யூதாசன்று,  

கட்டி அணைத்து முத்தமிட்டான்.  

ஈட்டிக் கையுடன் வந்தவருக்கு,  

இயேசைப் பிடிக்க ஒத்துழைத்தான்.

ஏட்டில் பார்க்கும் நம்முள் இன்று,  

எத்தனை எத்தனை யூதாசோ?  

கேட்டின் வழியில் ஆட்டுவித்து,  

கெடுக்க முயலும் பிசாசோ?  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

தூங்காதீர்!

தெய்வத்தின் முன்பு தூங்காதீர்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:45-46.  

45  அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு:

46  நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

இக்கட்டு சோதனை இன்னல் யாவும்,  

இறைவனின் செயலாய் எண்ணாதீர்.  

மக்கட்கு துன்பம் தந்தை தராரே,   

மனதிலும் தவறு பண்ணாதீர்.  

எக்கட்டு கட்டி, அலகை வந்தாலும்,    

இயேசு இருக்கிறார், ஏங்காதீர்.  

திக்கற்று நிற்போர் வேண்டல் கேட்பார்;   

தெய்வத்தின் முன்பு தூங்காதீர்!   

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.