நல்லடக்கம்!

நல்லடக்கம்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா  23:52-53.

கிறித்துவில் வாழ்வு:  
நல்லறை வீடு இல்லாரும்,  
நாட்டின் எதிரி என்பாரும்,  
கொல்லப்படுகிற வேளைகளில்,  
கொளுத்தப்படுவதைக் காண்போரே,
செல்லப் பிள்ளை இயேசுவிற்குச்  
சேர ஓரிடம் இலாதிருந்தும்,  
கல்லறை ஓன்று கன்மலையில், 
கட்டியிருந்ததைக் காண்பீரே. 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.   

தாழ்மை தரும் மேன்மை!

தாழ்மை தந்த மேன்மை!  
அரிமத்தியா யோசேப்பு!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23:50-51.  

பிறக்கும்போதும் இருந்தது தாழ்மை;  
பிறருக்குதவும் பொழுதும் தாழ்மை. 
இறக்கும்போதும் இருந்தது தாழ்மை. 
இயேசு வாழ்வே தாழ்மை தாழ்மை.  
சிறக்கும்படியாய் வந்தது மேன்மை.  
சீர்மிகு அறிஞர் தந்தார் மேன்மை.  
உரக்கச் சொல்வோம் தாழ்வில் மேன்மை.  
உண்மைக்கென்றும் மேன்மை, மேன்மை! 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா. 

அண்டிக் கொள்வோம்!

அண்டிக் கொள்வோம் சிலுவையிலே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23: 48-49.  

கிறித்துவில் வாழ்வு:  
தொண்டர் துடித்தார் தொலைவினிலே. 
 துயரைத் தாங்கும் வலுவிலையே. 
பெண்டிர் வடித்தார் ஏங்கலிலே. 
பெருகும் கண்ணீர் தேங்கலையே.   
கண்டோர் அடித்தார் மார்பினிலே.  
காணா மக்கள் சார்பினிலே.         
அண்டிக் கொள்வீர் சிலுவையிலே. 

அருள் மாமழை பொழிகையிலே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

அறைந்தவன் சான்று!

அறைந்தவன் சான்று!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:47. 

கிறித்துவில் வாழ்வு:  
கட்டளை பெற்று அறைந்தவரும்,  
கண்ணால் கண்டு சான்றுரைத்தார். 
கொட்டிய இயேசுவின் திருஉதிரம், 
குற்றம் அற்றது என்றுரைத்தார்.  
பட்டியல் இன்றும் நீளுவதாய் 
பலரும் செய்தி எடுத்துரைப்பார்.   
வெட்டிடும் கைகள் உணர்வடைய,    
விரைந்து ஆவியர் தடுத்துரைப்பார்!
-ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

எப்படி முடிக்கிறோம்?

கிறித்துவில் வாழ்வு:  


மைந்தனின் பணியை மாண்புடன் முடித்தார்.  

மறைநூல் வாக்காய் வாழ்ந்து படித்தார்.      

தந்தவர் கைகளில் தன்னுயிர் கொடுத்தார்;  

தரணியை மீட்கவே அதையும் விடுத்தார். 


நிந்தைச் சிலுவையும் மாற்றி அமைத்தார்.  


நேர்ந்தத் தீங்கிலும் வெற்றி சமைத்தார்.  


இந்த இயேசுவின் வழிவந்து நடப்பார்,  


இனியமீட்புடன் இப்புவி கடப்பார். 


ஆமென்.  


-கெர்சோம் செல்லையா.  

மறையும் கதிரோன்!

மறையும் கதிரோன்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:44-45.  

கிறித்துவில் வாழ்வு:  
இருள் போக்கும் திட்டம் என்று, 
இறைமகனார் தொங்கக் கண்டு,  
பொருள் கூறும்படியாய்ச் சென்று,   
போனதே கதிரோன் அன்று. 
திரள் துன்பம் தொடர்ந்து இன்று,   
தீங்கைத்தான் தருதல் கண்டு, 
மருள் உற்ற வேளை போன்று,  
மறைவது நமக்கும் நன்று!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.    

அன்பே அழகு!

அன்பே அழகு!  

கண்முன் காணும் எழைக்கிரங்கு; 


காணா இறையை இப்படி வணங்கு.  

மண் உடம்பாயினும் கடவுளின் வடிவு; 


மாற்றம் இல்லை; யாவரும் உறவு.  


விண் எனும் பேறு உண்டென நம்பு; 

வேண்டும் நம்முள் அவ்வருட் பண்பு.  


புண் படுத்தாது பிறரிடம் பழகு;  


புரியும் செயலில் அன்பே அழகு.  

-கெர்சோம் செல்லையா.   

விண் வீடு!

விண் வீடு!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:43.  

கிறித்துவில் வாழ்வு:  
திருந்திய கள்வனின் உள்ளம் கண்டு,  
தெய்வ மைந்தன் இடமளித்தார்.  
விருந்தினை ஒத்த விண் வாழ்வுண்டு;   
வீடு பேற்றையும் உடனளித்தார். 
வருந்திய நிலையிலும் அருளாலன்று,    
வாழு என்று மீட்பளித்தார். 
பொருந்திய திறவுகோல் பற்று என்று,    
புரியும்படியாய் விடையளித்தார்!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.   

குடியரசு நாள் வாழ்த்து!

72-ஆம் குடியரசு நாள் வாழ்த்து!

விடியல் தெரிவது எக்காலம்?

அடி அடியென, அடிகள் கொடுத்து,

அடிமையாக்கினர் அக்காலம்.

குடி குடியென, குடிக்கக் கொடுத்து,

குடியைக் கெடுக்கிறார் இக்காலம்.

விடி விடியென வேண்டும் நமக்கு,

விடியலைத் தருவது எக்காலம்?

படி படியென, பண்பை விதைத்து,

பணிவோர் ஆளும் நற்காலம்!

-கெர்சோம் செல்லையா.இறையன்பு இல்லம்,24, செக்ரெட்டேரியட் காலனி,இலட்சுமிபுரம்/இரட்டை ஏரி,குளத்தூர், சென்னை-600099.

திருந்தும் திருடனும், திருந்தா மனிதரும்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:40-42.


40. மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.  


கிறித்துவில் வாழ்வு:  


இறுதி வேளை இயேசுவை ஏற்பேன்,  

என்று நழுவும் நண்பர்களே,  

உறுதியாக உம்மில் வருமோ,  

உணர்ந்த கள்வன் பண்புகளே?  

அறுதி நேரம் அறியா வாழ்வில்,  

அளிக்கும் நொடிகள் செல்வங்களே.   

கருதி இன்றே திருந்தினால்தான்,     

கடவுள் ஏற்பார், பிள்ளைகளே! 


ஆமென்.  


-கெர்சோம் செல்லையா.