மதிக்கு நீதி கிடைக்குமா?

மதிக்கு நீதி கிடைக்குமா?

அழுது கொண்டே உயிர் விட்டாள்.

அவளுக்கு நீதி கிடைக்கவில்லை.

தொழுது கொண்டே தாய் கேட்டாள்.

தாய்க்கும் நீதி கிடைக்கவில்லை.

எழுதி வைக்கிற விதி என்பார்.

இங்கும் நீதி கிடைக்கவில்லை.

பழுது எங்கே? பகுத்தே பார்.

பாராவிடில், கிடைப்பதில்லை!

–செல்லையா.

யோவான் 8:41-42.

நல்வழி:


அன்பே இறைவன் என்று மொழிவார்;

ஆயினும் அன்பை அவர் பொழியார்.

தந்தை கடவுள் என்றும் விளிப்பார்;

தமது செயலால் மகன் பழிப்பார்.

இன்றே தவற்றை உணர்ந்திடுவார்,

இயேசுவோடு பிணைந்திடுவார்.

நன்றாய் அன்பில் வளர்ந்திடுவார்,

நலமிலா தீதும் களைந்திடுவார்!

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.  

யோவான் 8:39-40.

நல்வழி:


தந்தையர் நேர்மையைப் போற்றியுரைத்தல்,

தவறு என்று சொல்லேன் நான். 

முந்தையர் விதைத்த நன்மையின் பயனை,

முழுவதும் இன்று அறுப்பவன் யான். 

மைந்தனாய் தந்தையின் பண்பைக் கொண்டு,

மனிதருக்கென்ன செய்தேன் நான்?

எந்தையிறையே, என்னைத் தந்தேன்;

இயேசு போன்று நடக்கத்தான்! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

பெற்றோரிடம் கற்றது என்ன?

பெற்றோர் சொல்லித் தந்தது என்ன?
நற்செய்தி: யோவான்: 8:37-38.

நல்வழி:


பெற்றோர் சொல்லித் தந்தது என்ன?

பெரியோர் என்பின் சிந்திப்பீர். 

கற்றோர் என்றால் கொலை செய்வாரா?

கயமை வெறியினை நிந்திப்பீர். 

தொற்றாதிருக்கிற நற்பண்பென்ன? 

தூயோன் இயேசுவைச் சந்திப்பீர். 

உற்றார் உறவாய் யாவரும் வருவார்;


ஒவ்வொருவரையும் மன்னிப்பீர்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

நாலடி நற்செய்தி!

எது மீட்கும்?

 
உங்கள் பற்று உங்களைக் காக்கும்;

உண்மை நம்பி, உளம் புதிதாக்கும்.  

எங்கள் மீட்பு  இதனைச்  சொல்லும்;


இறைவழி தானே என்றும் வெல்லும்!

-செல்லையா.

என்னுடன் இருப்பவர்!

என்னுடன் இருக்கும் நன்னிறை!
நற்செய்தி: யோவான் 8:29.

நல்வழி:

என்னைப் படைத்து, யாவையும் கொடுத்து,

எங்கும் நடத்தும், என் இறையே,

தன்னம் தனியே தள்ளவும் தடுத்து, 

தாங்கிச் சுமப்பதும் உம் நிறைவே. 

இன்னிலத்தோரும் இவ்வறிவடைவார்;

இறைவழி காட்டிடும் திருமறையே. 

சென்னிறக் குருதி தந்திடும் உறுதி,

சீராக்கட்டும் இவர் குறைவே! 

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

தாழ்வு தருகிற உயர்வு!

தாழ்வு தருகிற உயர்வு!

நற்செய்தி: யோவான் 8:28.

நல்வாழ்வு:


தாழ்வில் உயர்வு, பெற்றுச் சொல்ல,

தவறாதிறை முன் வருவீரே. 

வாழ்வின் மேன்மை குருசில் கண்டு,

வளமாம் தாழ்மை பெறுவீரே.

ஏழ்மை என்றும் பொருளில் அல்ல;

இறையறிவாகும், தெரிவீரே. 

ஆளும் இறையின் தாழ்மை கொண்டு,

அன்பால் நன்மை புரிவீரே!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா. 

இயேசு யார்?

இயேசு யார்?


நற்செய்தி: யோவான் 8:25-27

நல்வழி:


என்னில் எழுந்த ஐயம் தீர்த்து,

என்னை ஆளும் ஏசுவே,

முன்னில் வந்து, கேளாதிருந்து, 

முனகுவாரிலும் பேசுமே. 

தன்னைக் காணும் தன்மை ஈந்து,

தவற்றினின்று மீளுமே. 

பின்னிக் கொண்ட, பேதைமை ஓட,

பேரறிவாலே ஆளுமே!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

விண் பார்ப்போம்!

விண் பார்ப்போம்!

நற்செய்தி: யோவான் 8:23-24

நல்வழி:


கண்ணைக் கட்டி, காட்டில் விட்ட,

கதை போல் வாழும் மானிடா,

எண்ணத் தூய்மை எப்படிப்பட்ட,

இனிமையான தேனடா!

மண்ணைத் தேடின், மண்ணேயாகும்,

மனதின் எண்ணம் தானடா. 

விண்ணைப் பார்த்து, வேண்டு தூய்மை. 

விடியும் வாழ்வு வானடா!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

தற்கொலை!

நற்செய்தி: யோவான் 8: 22.

நல்வழி:


உன் பிறப்பு, உன் விருப்பா?

உண்மை அது இல்லை. 

என் இறப்பு, என் முடிவா?

எனக்குரிமை இல்லை. 

தன் பிறப்பின் நோக்கறிவின்,

தவறுமிடம் இல்லை.

நன் வாழ்வு, நம் இறையில்;

நம்பின், குறைவில்லை!

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.