உயிர் மூச்சு!

உயிர் மூச்சு! 
வாக்கு: யோவான் 10:17-18. 
17. நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
18. ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.  
வாழ்வு:


என்று போகும், எப்படிப் போகும்,

என்றறியா உயிர் மூச்சை,

அன்று இயேசு அளித்த வாக்குள்,

அடைத்தறிதல் நலமாம். 

இன்று வாழும் நமது வாழ்வும்,

இறை அருளும் கொடையாய்,

நன்கு பேண நாம் நினைத்தால்,

நலம் என்றும் நிலையாம்! 


ஆமென்.  


-கெர்சோம் செல்லையா. 

ஒரே மந்தை! ஒரே மேய்ப்பன்!

ஒரே மந்தை, ஒரே மேய்ப்பன்!
வாக்கு: யோவான் 10:16.

16. இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.

வாழ்வு:

தந்தை ஒருவன், பிள்ளைகள் பலபேர்;

தான்மட்டும் பிள்ளை எனலாமா?

மந்தை ஆடுகள் இருப்பிடம் வேறூர்;

மற்றவை கழுதை எனலாமா?

இந்தத் தவறைச் செய்கிற ஊழியர்,

இதுவும் இறைவழி எனலாமா?

சொந்தக் கூட்டைத் திருத்தியமைப்பீர்;

சொற்படி நடப்போம் எனலாமா?


ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அறிவோம்!

அறிவோம்!
வாக்கு: யோவான் 10:14-15. 


14. நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
15. நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.  


வாழ்வு:


இறைவன் நம்மை அறிவது போல, 

இறையை அறிவது அறிவாகும். 

பிறவியெடுத்த மனிதர் எவரும்,

புரிந்து கொள்வது நெறியாகும். 

முறையாய் நாமும் கற்கும் போது,

முதலில் தெரிவது குறையாகும்.

திறவாக் கதவும் திறந்து அருளும்;

தெய்வ அன்பில் நிறைவாகும்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

நினைப்போமா?

நினைப்போமா?


புலிகள் உண்பது மகிழ்ச்சி என்ற,

புதிய பொருளியல் ஆட்சிகளில்,

வலியில் மடியும் மான்களை மீட்க,

வழி ஏதேனும் நினைத்தோமா? 

 எலிகள் என்று எண்ணப்படுகிற, 

எளிய மக்கள் வீழ்ச்சிகளில்,

பலியைத்தானே பார்க்கின்றீர்கள்.

பலியாவோரை  நினைப்போமா?


-செல்லையா.

தன்னலமுள்ளவன்!

தன்னலமுள்ளவன்! 


வாக்கு: யோவான் 10:12-13. 

வாழ்வு: 

நான் மட்டும் நான் மட்டும், என்கிற எண்ணம்,

நஞ்செனப் பரவும் நம் நாட்டில்,

கோன் விட்டுக் கொடுத்த குருதியும் உயிரும்,

கொடியோர் கண்ணைத் திறவாதோ?

தேன் சொட்டும் தேன் சொட்டும் தெய்வ வாக்கும்,

தெரியா மனிதர் தம் வீட்டில், 

வான் எட்டும் நற்சீர் வாரிக் கொடுக்கும்,


வாழ்வு தரவும் பிறவாதோ? 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

நல்லாயன் !

வாக்கு: யோவான் 10:11.

வாழ்வு:


ஐந்தறிவுள்ள ஆட்டைக் காக்க,

ஆறறிவாளன் உயிர் விட்டால்,

எந்த அறிஞர், இங்கு சொல்வார்,

அவனோர் ஆட்டின் நல்லாயன்?


மைந்தனிறையோ இவர் போலல்ல;

மனித வடிவாய்த் தனையிறக்கி, 

சொந்த உயிரால் நம்மை மீட்டார்.

சொல்வோம், இவரே நல்லாயன்!


ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.   

வாசல்!

வாசல்!

வாக்கு: யோவான் 10:7-10.

7. ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.8. எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.10. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

வாழ்வு:

ஆட்டை அடைக்கும் தொழுவம் கண்டேன்.

அதற்கொரு வாசல் வழியும் கண்டேன்.

கோட்டை அரண்போல் காப்பதும் கண்டேன்.

கோடி உயிர்கள் மீட்பதும் கண்டேன்.

கேட்டை வெறுக்கும் மனிதனும் கண்டேன்.

கெடாமல் திருத்தும் புனிதனும் கண்டேன்.

வீட்டை மாற்றும் இயேசுவைக் கண்டேன்.

விண் அகத்தின் வாசலும் கண்டேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஐந்தறிவு ஆடு!

வாக்கு: யோவான் 10:5-6.

வாழ்வு:


ஆட்டின் அறிவு ஐந்தேயாயினும்,

ஆயன் யாரென அது அறியும். 

வீட்டின் காவல் நாய்களாயினும், 

வெளியாட்களை இனம் புரியும்.

நாட்டின் மக்கள் நிலையைப் பாரும்;


நன்மை தீமை பகுத்தறியும். 

கேட்டின் விளைவுகள் எண்ணாவிட்டால்,

கெட்ட பின்புதான் புரியும்! 

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

ஆட்டின் அறிவு!

ஆட்டின் அறிவு!


வாக்கு: யோவான் 10:3-4. 


3. வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்.
4. அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.


வாழ்வு:


ஆடும் கூட ஆயனை அறியும்,

அவன் குரல் கேட்டு நடக்கும். 

ஓடும் திருடன் ஓசை கேட்டும்,

உடன்பட மறுத்துக்கிடக்கும்.

தேடும் தெய்வக் குரலழைத்தும்,

தெரியாதது போல் நடக்கும்,

வாடும் மனிதப் பெருங் கூட்டம்,

வறுமையில்தான் கிடக்கும்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

ஆயர்!

ஆயர்!

வாக்கு: யோவான் 10:1-2. 1.

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.2. வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.

வாழ்வு:

ஆயர் பண்பை ஆண்டவர் சொன்னார்.

அறிந்து நடப்பது நம் கடமை.

நேயர் எவரும் நேரெதிர் எண்ணார்;

நேர்மை தரட்டும் நம் உடமை.

தீயர் ஒளிந்து திருடிட முனைவார்;

திருட்டு தடுப்பது நம் கடமை.

தூயர் வாக்கின் மழையில் நனையார்

தேடா மீட்பரும், நம் உடமை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.