என்ன பாடுகிறோம்?

இறையறிந்தோர், பாடுகிறார்!

காசு காசென்றே, ஓடுகிறார்;
கை நிறையவே, ஆடுகிறார்.
தூசு தூசென்றே, சாடுகிறார்;
துயரில், இறை தேடுகிறார்!
மாசு நீங்கிட யார் பாடுவார்?
மதி பொங்கிட யார் பாடுவார்?
ஏசு தங்கிட யார் பாடுவார்?
இறையறிந்தால், பாடுவார்!

-கெர்சோம் செல்லையா.

கிறித்தவர் என்று சொல்லுங்கள்!

யோவான் 12:42-43.

இறை வாழ்வு: 

உள்ளில் வந்து உறையும் இறையை,
ஊரார் காணச் சொல்லாமல்.
தள்ளித் தொலைத்த தன் காதலிபோல்,
தயங்கி, மறைப்பவர் கிறித்தவரா?
அள்ளிச் செல்வீர் என்று மயக்கும்,
ஆயிரம் சலுகை பின் செல்லாமல்,
வெள்ளியைப் போல உருக்கும்போதும்,
விண்ணைப் பார்ப்பவர் கிறித்தவரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இன்றையத் தேவை!

இன்றையத் தேவை!

இறையருள் நாடல் இன்றையத் தேவை.
இதை ஈவதுதான் இறை நம்பிக்கை.
குறை பெருத்திருத்தல் நமது வாழ்க்கை.
கிறித்துவில்தான் நிறை நம்பிக்கை!
மறைபொருள் தேடல் மாண்பின் தன்மை;
மாயை நீக்கும் வாக்கின் நன்மை.
திரைமறைவாய் வரும் தீயோன் தீமை,
தெய்வ விழியில் நோக்கின் நன்மை!

-கெர்சோம் செல்லையா.

எங்கள் வழியாய்…..

இறை வாக்கு: யோவான் 12: 38-41.

இறை வாழ்வு:


எங்கள் வழியாய் இறையுரை கேட்டும்,

ஏற்க மறுப்பவர் இங்குண்டு. 

தங்கள் வழியால் விண்ணகம் எட்டும்,

தகுதி நிறைந்தவர் எங்குண்டு?

மங்கள வாழ்வில் நாட்டம் காட்டும்,

மாந்தர் உள்ளிலும் இருளுண்டு. 


திங்கள் ஒளிபோல் மகிழ்ச்சி கூட்டும்,

தெய்வ வழியிலே அருளுண்டு!


ஆமென். 

கெர்சோம் செல்லையா. 

மூளை இருக்கிறதா?

மூளை இருக்கிறதா?

எல்லோருக்கும் மூளையைத் தந்து,
இயக்கவே இறைவன் படைத்தார்.
இல்லை பலர்க்கு, என்று மறுத்து,
இழிஞர் உலகையே உடைத்தார்.
கல்லார் இல்லாக் காட்சி நிறைந்து,
களிக்கவே இறைவன் கொடுத்தார்.
பொல்லாரோயெனில் தமக்கேயெடுத்து,
புவியின் நன்மை கெடுத்தார்!

-கெர்சோம் செல்லையா.

மேலோன் அன்பு!

மேலோன் அன்பு ஊறட்டும்!

சாதியில் உயர்ந்தோர் என்று நினைப்போர்,
சரிசமனாகிட இறங்கட்டுமே.
நீதியில் உயர்த்தும் கிறித்துவை ஏற்று,
நேர்மை புரியக் கறங்கட்டுமே.
பீதியில் தாழ்ந்திட்ட எளிய இனத்தோர்,
பிழையுமுணர்ந்து ஏறட்டுமே.
மீதியில் இருக்கிற நமது வாழ்வும்,
மேலோன் அன்பில் ஊறட்டுமே!

-கெர்சோம் செல்லையா.

அருஞ்செயல் அறியார்!

அருஞ்செயல் அறியார்!
இறைவாக்கு: யோவான்: 12: 36-37.

36. ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார்.

37. அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.

இறை வாழ்வு:

உருட்டும் புரட்டும் உணவாய்க் கொண்டோர்,
உண்மை வாழ்வு நாடாரே.
திருட்டும் களவும் தொழிலாய்க் கண்டோர்,
தெய்வ  வழியும் தேடாரே.
இருட்டைப் போற்றும் குருட்டு இனத்தோர்,
இறையின் அதிசயம் பாடாரே.
மிரட்டும் தீவினை புரட்டும் நாளில்,
மீட்பரை ஏற்பின், வாடாரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இருளா? ஒளியா?

இருளா? ஒளியா? 

இறை வாக்கு: யோவான் 12:34-35.

இறை வாழ்வு:

இருளா? ஒளியா? என்று கேட்டால்,

இருள் வேண்டாம் என உரைப்பரும்,

அருளா? பொருளா? என்று கேட்டால்,

அறியாதவராய் முறைக்கிறார்! 

பொருள் தேடுலகில் புறம்பே சொல்லும்,

பொய் நிறை வாக்கு இறைப்பரும்,

மருளகலாத மனதின் இருளால்,  

மறைக்கு எதிராய்க் குரைக்கிறார்!


ஆமென். 


கெர்சோம் செல்லையா. 

நன்றி இறையே, நன்றி!

நன்றி இறையே, நன்றி!

(பயண நூல் 16:18)


மிகுதியாய்ச் சேர்த்தவர்க்கு,

மீதியானதும் இல்லை. 

கொஞ்சமாய்ச் சேர்த்தவர்க்கு,

குறைவானதும் இல்லை. 

தகுதியாயெனப் பார்த்தால்,

தன்னிறைவும் இல்லை.

தந்தை இறையருளால்,

தாழ்ச்சியும் இல்லை!


நன்றி இறையே நன்றி!

-கெர்சோம் செல்லையா.

இறுதித் தீர்ப்பு!
இறை வாக்கு: யோவான் 12:31-33. 

இறை வாழ்வு:

இறுதித் தீர்ப்பு இறையிடம் உண்டு; 

இன்று வந்தால் அன்பறிவோம்.

குரிசில் சிந்தும் குருதியும் கண்டு 


குளித்தால் மீட்பு, நன்கறிவோம்.

உறுதிப் பற்றில் இணைவார் உண்டு;


உய்யும் வாழ்வு, என்றறிவோம். 

கருதிக் கொண்டு கனியார் கண்டு, 


கருக்கும் நெருப்பு, இன்றறிவோம்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.