துணிவு!

தேடுவோர் முன்!

இறை மொழி: யோவான் 18:4-5.

4. இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.

5. அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான்.

இறை வழி:

கொல்ல வருபவர் என்றே அறிந்தும்,

கொடுக்க இயேசு முன் சென்றார்.

நல்ல எண்ணம் கொள்ளார் வந்தும்,

நன்மையாக்கவே, அவர் சென்றார்.

எல்லை இல்லா அன்பை ஈந்தும்,

எதிர்ப்பார் கொல்லவே நின்றார்.

சொல்லை அறியார் பெருத்திருந்தும்,

சொன்ன சொல்லாய் இறை நிற்பார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

May be a graphic of monument

கிறித்தவருக்கும் இது பொருந்தும்!

கிறித்தவருக்கும் இது பொருந்தும்!

உன்னை ஒருவன் தாழ்ந்தோனென்றால்,

உனது நெஞ்சம் துடிக்காதா?

பின்னை எதற்குப் பிறரை விளித்தாய்?

பிழையால் கலகம் வெடிக்காதா?

தன்னை உயர்வாய் எண்ணுவதெல்லாம்,

தவறென மூளையும் படிக்காதா?

இன்னில மக்கள் யாவரும் இணையே.

இறை வாக்குனக்குப் பிடிக்காதா?

-கெர்சோம் செல்லையா.

May be an image of 4 people, child and text that says 'WE ARE... ALL EQUAL @crystalkidscenter'

இப்படை எதற்கு?

இப்படை எதற்கு?

இறை மொழி: யோவான் 18:1-3.

1. இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள்.

2. இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.

3. யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.

இறை வழி:

முன்னூறு நானூறு வீரரின் கூட்டம்

முற்றுகை இடவா செல்கிறது?

அந்நூறு படையை அனுப்புந் திட்டம்,

அறிவு உடமையா சொல்கிறது?

செந்நீர் வடிக்க எண்ணும் நெஞ்சம்,

சீரிய வாழ்வைக் கொல்கிறது.

எந்நாளாயினும் வஞ்சம், வஞ்சம்;

இன்றும் மெதுவாய் மெல்கிறது!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

May be an illustration of text

இறையன்பு!

இறையன்பு!

இறை மொழி: யோவான் 17:26.

26. நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.

இறை வழி:

என்ன அறிவை, இறையிடம் பெற்றோம்,

எண்ணுவோமா நண்பர்களே?

சொன்ன வாக்கின் பொருளும் கற்றோம்,

சொல்லுவோமா, அன்பர்களே?

அன்பு தானே, இறைவனின் வடிவம்,

அகத்திலுண்டா, நண்பர்களே?

பின்பு தருவோம், இயேசுவின் படிவம்,

பெரும்பேரறிவு, அன்பர்களே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

No photo description available.

நேர்மை!

நேர்மை வாழ்வு!

இறை மொழி: யோவான் 17:25.

25. நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.

இறை வழி:

நூற்றுக்கு நூறு, நேர்மை என்றால்,

நிமிர்ந்து நிற்க, எவருமில்லை.

போற்றுதற்குரிய, இறையின் அன்பால்,

போகிறோமெனில், தவறுமில்லை.

மாற்றியமைக்கும், மைந்தன் வாழ்வில்,

மாசினைத் தேடின், எதுவுமில்லை.

கூற்றினைப் போல, முயல்வார் மீள்வில்,

கிறித்துவன்றி, புதுமையில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

May be an image of text

அன்பின் மாட்சி!

அன்பின் மாட்சி!

இறை மொழி: யோவான் 17:24.

இறை வழி:

மாட்சி என்ற இறையினுருவம், 

மைந்தனில் காண்கின்றோம். 

காட்சி கண்ட நாமுமடைவோம்;

கனிகையில் என்கின்றோம். 

நீட்சி என்ற நிலைவாழ்வின்பம், 

நிலந்தராது, சொல்கின்றோம்.

ஆட்சி பேறும் அவரது விருப்பம்;

அன்பினாலே வெல்கின்றோம்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

காந்தியாரை நினைப்போம்!

காந்தியாரை நினைப்போம்!

காந்தி அடிகளும், கொன்றவனும்,

களத்தில் இன்று போட்டியிட்டால்,

ஏந்தி எடுத்து, வாக்களித்து,

யாரை வெற்றி பெறச் செய்வர்?

சாந்தி தருவதாய் வாக்குரைத்தும்,

சண்டை மூட்டிடும் ஊர்த்தலைவர்,

வாந்தி எடுக்கவே வைத்திருப்பர்;

வறியர் உணர்வின், உய்வர்!

-கெர்சோம் செல்லையா.

May be an image of 1 person

ஒற்றுமை!

ஒற்றுமை!

இறை மொழி: யோவான் 17:22-23.

22. நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

23. ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

இறை வழி:

தந்தை மைந்தன் ஆவியர் ஒன்று.

தருகிற மாட்சி என்றும் நன்று.

மைந்தன் கூறும் வாக்கு இன்று,

மலர்கவே ஒற்றுமை என்று.

இந்தக் கொள்கை இல்லா வீடு,

இருந்தால் அதுவே சுடுகாடு.

நொந்தது போதும் ஒன்றாய்க் கூடு.

நிகழ்த்துமே, அன்பைப் பாடு!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஒற்றுமை தேவை!

ஒற்றுமையற்ற ஊழியம்!

இறை மொழி: யோவான் 17:20-21.

இறை வழி:


இரைப்பை நிறைக்கும் நோக்கம் கொண்டு,

இன்றைய கிறித்தவம் இருப்பதனால்,

உரைப்பவர் உள்ளில் ஒற்றுமை இல்லை;

ஊரும் கிறித்துவை ஏற்கவில்லை. 

நிறைப்பவர் நாட்டின் தலைவர்கள் போன்று, 

நேர்மை அற்றுப் பெருப்பதானால், 

நரைத்தவர் எனினும், நன்மை இல்லை;

நாமும் நற்கனி பார்க்கவில்லை!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

கிறித்தவ தலைவர்களே!

கிறித்தவ தலைவர்களே!

இறை மொழி: யோவான் 17: 18-19.

இறை வழி:

தலைவர் தூய்மையின் இருப்பிடமாயின்,
தொண்டரும் தூய்மை நாடிடுவார்.
அலைகிற அவரும் பெருச்சாளியாயின்,
அடியரும் அவ்வழி ஓடிடுவார்.
நிலைமை  தெரிந்த இறைமகன் அன்று,
நேர்மை ஆக்கிட  வேண்டுகிறார்.
விலைபோகாத  தலைவர்தான் தேவை.
வேண்ட, இயேசு தூண்டுகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.