ஏன் இறைவன் மனுவாய்ப் பிறந்தார்? என்கிற கேள்விக்குப் பதிலென்ன? வான் விடுத்து எவர்தான் வருவார்? வையம் இறங்கிட ஏது என்ன? நான் என்கிற தீவினை பெருத்து, நானிலம் கெட்டு விழுந்ததினால், தான் பெற்ற மக்களை மீட்க, தந்தையன்பாய் மகனளித்தார்! (யோவான் 3:16)
புதிய ஏற்பாடு! ஒவ்வொன்றிற்கும் ஒருவேளையுண்டு; உரைப்படி வாக்கும் பிறந்தது. எவ்விதமான பகட்டும் தவிர்த்து, எளிமையின் ஆவி புரிந்தது. கவ்விடும் நிந்தை கத்தியாயுண்டு; கன்னியின் நெஞ்சோ திறந்தது. இவ்விதமான திருமகன் பிறப்பு, யாவற்றிலுமே சிறந்தது! (லூக்கா 1)
வருவார் என்கிற வாக்கின்படியே, வையத்தாரிறை காத்திருந்தார். தருவார் அவரும் தகுந்த அரசே; தாமதமாயினும் பார்த்திருந்தார். இருயிரு நூறு ஆண்டுகளாகியும், ஏனோ இறைவன் பேசவில்லை. ஒருவரும் அறியா அந்த மௌனம், உடைக்குமறிவும் வீசவில்லை!