எனக்கு அரசன் யார்?

எனக்கு அரசன் யார்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:27-28.

27  அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.

28  இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.

கிறித்துவில் வாழ்வு:

நானே எனக்கு அரசன் என்று,

நம்பி நடப்பது குறையாகும்.

தானே செல்பவன்போல இன்று,

தன்னை அடைக்கும் சிறையாகும்.

வானே நமது வாழ்விற்கென்று,

வகுத்த வழிதான் முறையாகும்.

தேனே தோற்கும் இனிமை இன்று,

தெரியும் நல்லிடம் இறையாகும்!

ஆமென்.

வளர்க!

வளர்க!!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:25-26.

25  அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.

26  அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:

பற்று வளர, பண்பும் வளரும்;

பற்றியவரின் வாழ்வும் மலரும்.

அற்று போகும் இடமும் நோக்கும்;

அழிவு என்றே பெயருண்டாக்கும்.

பெற்று வாழும் கிறித்தவர் காணும்;

பிசாசும் கூட அவர்முன் நாணும்.

கற்று நீவிர் பற்றில் தேறும்.

கடவுளுக்கு நன்றி கூறும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

www.thetruthintamil.com

ஒன்றும் போதும்!

ஒன்றும் போதும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:20-24.

20  பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.

21  நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.

22  அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,

23  பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக் கொள்வேனே என்று சொல்லி;

24  சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

ஓன்று மட்டும் உள்ளது என்று,

உறங்கும் இன்றைய கிறித்தவமே,

நன்று என்று நன்மைகள் செய்ய,

ஓன்றும் போதும் உன்னகமே.

கன்று ஈன்ற பசுக்கள்கூட,

கனிவாய்ப் பாலைக் கொடுக்கையிலே,

இன்று உந்தன் அன்பினாலே,

யாவும் வெல்வாய், தடுக்கலையே!

ஆமென்.

ஐந்து பத்தானது!

ஐந்து பத்தானது!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:18-19.

18  அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.

19  அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

நைந்து நலிந்து நரங்கிய எனக்கு,

நம்பிக்கை ஈந்தது இறைமகனே.

ஐந்து இன்று ஆனது பத்து;

அவற்றைத் தந்தது இறைமகனே.

முந்து ஆண்டு முறைத்தோர் முன்பு,

மும்மழை பொழிவது இறைமகனே.

வந்து ஏற்று வணங்குவோருக்கு,

வாழ்வளிப்பதும் இறைமகனே!

ஆமென்.

பத்து!

பத்தை வைத்து பத்து!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:16-17.

16  அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.

17  எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

பத்தினைத் தந்ததும் உம் அருளே;

பயன்கள் வந்ததும் உம் அருளே.

அத்தனைச் சொத்தும் உம் அருளே;

அடியனால் அல்ல, உம் அருளே.

பித்தனாய்ப் பதுக்கேன் உம் பொருளே;

பிறர்க்கும் தேவை உம் பொருளே.

மொத்தமும் படைத்தேன் உம் பொருளே;

மும்மைத் தெய்வமாம் பரம்பொருளே!

ஆமென்.