இயேசுவின் காலடி!

ஆண்டவர் காலடி!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:38-39.

38பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
39அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

கிறித்துவில் வாழ்வு:
எங்கே சென்றால் அமைதி கிட்டும்,
என்று அலைவார் நாட்டினிலே,
மங்கை மரியின் செயலைப் பாரும்;
மகிழ்ச்சி பெருகும் வீட்டினிலே.
இங்கே இவளது இருப்பிடம் தேடும்;
இயேசு வாழ்க்கை ஏட்டினிலே.
அங்கே ஆண்டவர் காலடி கண்டோம்;
அமைதி பிறக்கும் கூட்டினிலே!
ஆமென்.

இரங்குவோம்!

இரக்கம் என்பது இறையின் பண்பு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:36-37.

36இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.
37அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
இரக்க மென்னும் இறைவன் பண்பை, 
இன்றைய மனிதர் காட்டலையே.
உரக்க முழங்கும் திரு அவையாரும்,
உதவிட கைகள் நீட்டலையே.
அரக்கு போன்று அணைத்து ஏற்கும்,
அன்பையும் தம்முடன் கூட்டலையே.
பரக்கு பார்க்கும் இரக்கம் அந்நாள்;
பயன் தரார்க்கு மீட்பிலையே!
ஆமென்.

நன்மை செய்வதே வாழ்க்கை!

நன்மை செய்வதே வாழ்க்கை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:33-35.

33பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
34கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
35மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
கோழையர் அஞ்சிப் பறக்கையிலே,
கொடுமையில் உதவ மறக்கையிலே,
ஏழையரோ முன் வருகின்றார்;
இரங்கி, உதவிகள் தருகின்றார்.
தோழமை நாடும் மானிடரே,
தொண்டுளம் இருக்க ஏனிடரே?
வாழ்க்கை என்பது நன்மைக்கே;
வழங்குவீர் அதனை இன்றைக்கே!
ஆமென்.

தமக்கு என்றால்…..

உதவாது ஒளிந்தால்….

கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:31-32.

31அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
32அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.

கிறித்துவில் வாழ்வு:
தமக்குத் தேவை எனும்போது,
தாழ்ந்து பலரிடம் கேட்போரும்,
நமக்குத் துன்பம் வரும்போது,
நயந்து நன்மை செய்வதில்லை.
எமக்கு யார்தான் உதவிடுவார்,
என்று ஏங்கும் எழையரே,
உமக்கு ஒன்றும் செய்யாமல்,
ஒளிவோர் எவரும் உய்வதில்லை!
ஆமென்.

தாழ்வில் இறங்குகிறார்!

தாழ்வில் இறங்கும் மானிடமே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா: 10:29-30.

29அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.
30இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
கூழ், உடை, வீடு, பொருள் சேர்க்கக்
கொடுமையை ஆயுதம் ஆக்கிவிடின்,
தாழ்வில் இறங்குவாய் மானிடமே;
தவற்றைத் திருத்து இன்னாளே.
ஊழ்வினை என்று ஒதுக்காமல்,
ஒரே பிறவியின் பயனடைய,
வாழ்வெது சாவெது தெரிவாயே;
வருந்நாள் யாவும் பொன்னாளே!
ஆமென்.