எளியரின் காணிக்கை!
நற்செய்தி மாலை: மாற்கு12:41-44.
“இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, ‘ இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
எல்லாம் இருப்போர் ஏதோ கொடுத்தால்,
எப்படி நூற்றுக்கு நூறாகும்?
இல்லாதவர்கள் யாவும் கொடுத்தால்,
இறைவன் விரும்பும் பேறாகும்.
நல்லாயர்போல் ஏழையை மதித்தால்,
நமது திரு அவை சீராகும்.
சொல்லால் செயலால் வாழ்ந்து கொடுத்தால்,
சுற்றம் போற்றும் பேராகும்!
ஆமென்.
