நற்செய்தி

திரண்ட செல்வம் தராத இன்பம்,
தெய்வ வாக்கால் வருவது காணும்!
வறண்ட வாழ்வைச் செழிக்க வைக்கும்
வல்ல இறையை வந்து பணியும்!

நல்வாழ்த்து:
வாழ்த்துகிறேன் இயேசையா;
வந்தென்னுள் ஆளையா.
தாழ்த்துகிறேன் நெஞ்சையா;
தங்கி எனை மீளையா!

நல்வாக்கு:மத்தேயு/Matthew 24:29-31.
மானிடமகன் வருகை:
” துன்பநாள்கள் முடிந்த உடனே கதிரவன் இருண்டுவிடும்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்; வான்வெளிக்கோள்கள் அதிரும்.பின்பு வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்றும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார். இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர். அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்.”
நல்வாழ்வு:
இயற்கை அசையும் நேரத்திலே,
இறைமகன் வருவார் வானத்திலே.
வியக்கும் செயல்கள் காண்கையிலே,
விண்ணில் சேர்வோம் நண்பர்களே.
மயக்கும் உலகு மறைகையிலே,
மனம் வருந்துதல் பயனிலையே.
தயக்கம் தவிர்த்து இப்போதே,
தருவீர் நெஞ்சை இயேசுவுக்கே!
ஆமென்.

(பின் குறிப்பு:
பயணம் அழைப்பதால் செல்கின்றேன்.
படைத்தவர் அருளில் மகிழ்கின்றேன்.
இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை,
இறைவன் காப்பார், வேண்டுகிறேன்!
– கெர்சோம் செல்லையா)