தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்! நான் இந்துக்களின் பள்ளியில் பயின்றவன்; நான் சென்ற கல்லூரிகள் கிறித்தவர்களால் நிறுவப்பட்டவை. நான் பணியாற்றிய நாட்டின் பெரும்பான்மை மக்களோ இசுலாமியர். பல மொழி, நாடு, இன, சமய மக்களுடன் வாழ்ந்து பழகும் பேறும் எனக்குக் கிடைத்தது. இன்னாள் வரையிலும் எந்த மனிதருடன் வேறுபாடுகொண்டு பேசியதோ, வெறியுடன் செயல்பட்டதோ கிடையாது. எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் என்பதே என் எண்ணம். இப்படியிருக்க, இன்று ஒருவரைப் பார்க்க வேண்டிய நிலை வந்தது. அவர் இந்திய சமயங்களில் ஒன்றைச் சார்ந்த இளைஞர். என் வயதில் பாதியே அவருக்கு இருக்கும். “குரு” என்று அறிமுகம் செய்தார்கள். வணங்கினேன். வணங்கினார். வலக்கை நீட்டி வாழ்த்த விரும்பினேன். கை தரவில்லை. கை பிடித்து வாழ்த்தும் பழக்கமில்லை என்றார். ” உங்கள் வல்லமை எனக்கு வந்து விடும்,என்ற அச்சமா?” என்று வினவியும் பார்த்தேன்; பதிலில்லை. சாதி வெறி கொள்ள அவர் அய்யனுமில்லை; சமயத்தைச் சொல்லிப் பிழைக்க நான் பொய்யனுமில்லை. அப்படியென்றால் ஏன் கை நீட்டிப் பிடித்து பழக மறுக்கிறார்கள்? இசுலாமியர்/யூதர் இறுக இணைத்து, மும்முறை முத்தமிட்டு வரவேற்பார்கள். அப்படியெல்லாம் கட்டித் தழுவச் சொல்லவில்லை. குறைந்தது கைநீட்டி வரவேற்கலாமே! ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்! நன்றி, நல் வாழ்த்துகள்!

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *